கோடையைக் கொண்டாட அற்புதமான வழி சுற்றுலா. ஆனால், பல சமயங்களில் வெளியூர் பயணங்களே வியாதிகளுக்கான அழைப்புகளாக மாறிவிடுவது உண்டு. பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கு எப்படி தயாராவது? 

இடத்தைத் தேர்ந்தெடுங்கள்

சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கான முதல் படி. பெரும்பாலும் கூட்டம் குவியும் இடங்களைத் தவிர்த்து, அதிகம் அடையாளம் காணப்படாத இடங்களைத் தேர்ந்தெடுங்கள். இத்தகைய இடங்கள் சுற்றுலாவை நீங்கள் முழுமையாக அனுபவிக்க உதவுவதுடன் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல், நெருக்கடி, நோய்த்தொற்று ஆகியவற்றில் இருந்தும் உங்களைக் காக்கும்.

சூரியனை எதிர்கொள்ளுங்கள்

அலுவலகத்துக்குள்ளும் வீட்டுக்குள்ளுமே இருந்து பழகிய உடல், திடீரென நாள் முழுவதும் வெயிலில் சுற்றும்போது தடுமாறும். வெப்பத்தை எதிர்கொள்ள பருத்தி ஆடையை அணியுங்கள். கண்ணுக்குத் தரமான கூலிங் கிளாஸை அணியுங்கள். தொப்பி அல்லது குடையை எடுத்துக்கொள்ளுங்கள். கைகளிலும் உதடுகளிலும் தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவிக்கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் வெந்தயம் விழுங்குவதும் உடல் சூட்டை வெகுவாகத் தணிக்கும்.

நிறைய தண்ணீர், கொஞ்சம் உணவு

பாதுகாப்பான குடிநீர் அவசியம். பயணங்களின்போது பரவும் பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகத்தான் பரவுகின்றன. குறிப்பாக, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு மூலக் காரணமே சுகாதாரமற்ற தண்ணீர்தான். அதனால், சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவசியம் தண்ணீர் குடியுங்கள் (வெப்பச் சூழலில் மட்டும் அல்ல் குளிர் சூழலிலும் டிஹைட்ரேஜன் ஏற்படலாம்). குளிர்பானங்களைத் தவிருங்கள். இளநீர் அருந்துங்கள். தர்பூசணியும் நல்லது.

வெளியூர்ப் பயணங்களின்போது வீட்டுச் சாப்பாடு கிடைப்பது அரிது. நல்ல உணவகங்கள் கிடைப்பதோ பெரும் சவால். என்ன செய்யலாம்? கூடுமானவரை பழங்களையும் உலர் பழங்களையும் சாப்பிடுங்கள். மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும்.

பழங்களில் மிளகாய்த் தூள் தூவி சாப்பிடுவதைத் தவிருங்கள். சமைக்காமல் மிளகாய்த்தூளை உட்கொள்வது வயிற்றுப்புண்ணில் இருந்து புற்றுநோய் வரை கொண்டுபோகும். ஒருவேளை உணவகங்களில் சாப்பிட வேண்டிய சூழல் உருவானால், அதிக காரம் அற்ற, எளிதில் செரிமானமாகும் உணவாகச் சாப்பிடுங்கள்.

மஞ்சள் மகிமை

அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டியை எடுத்துச் செல்வது நல்லது. அதில் மருந்துகளோடு துளசி இலைகள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றுக்கும் இடம் கொடுங்கள். நீர்நிலைகளில் குளிப்பதால் ஏற்படும் ஒவ்வாமையைத் தவிர்க்க நான்கைந்து துளசி இலைகளைச் சாப்பிடலாம். வைரஸ் ஒவ்வாமை கிருமிகளை இவை அழித்துவிடும். மிளகுத் தூளையும், மஞ்சள் தூளையும் பாலில் கலந்து குடிப்பதன் மூலம் சின்னம்மை உள்ளிட்ட பல தொற்று நோய்களைத் தவிர்க்க முடியும். பூச்சிகள் கடிக்காமல் இருப்பதற்கும் பூச்சி கடித்தால் போடுவதற்கும் என கிரீம்கள் இருக்கின்றன. வனப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வதாக இருந்தால் அவசியம் இவற்றையும் வாங்கிச் செல்லுங்கள்.

முதல் தகவல் முதல் உதவி

நீங்கள் செல்லும் ஊரில் உள்ள மருத்துவமனைகளைப் பற்றிய விவரத்தையும் தெரிந்துவைத்திருப்பது நல்லது. அவசரம் என்றால் எங்கே செல்வது என்று அல்லாட வேண்டிய இக்கட்டை இது தவிர்க்கும். உங்கள் பெயர், முகவரி, ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய தகவல்கள் அடங்கிய அடையாள அட்டையையும் வைத்திருங்கள். மருத்துவக் காப்பீடு செய்து இருந்தால் அதற்கான அடையாள அட்டையையும் மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.

Comments