யாழ். கொடிகாமம் தனியார் பஸ்ஸின் நடத்துநர் மிதிபலகையில் இருந்து தவறிக் கீழே விழுந்து காலில் பின் சில்லு ஏறி கால் முறிந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் மீசாலைச் சந்தியில் நேற்றுக் காலை இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த மகாலிங்கம் குகேந்திரன் (வயது20) என்பவரே கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்துக் குறித்து பயணிகள் கூறியதாவது தனியார் பஸ்கள் குறிப்பாக யாழ். கொடிகாமம் சேவையில் ஈடுபடும் அனைத்தும் மிதிபலகையில் பயணிகளை வைத்துக் கொண்டே பயணிக்கின்றன. ஒவ்வொரு பஸ் தரிப்பிடத்தை நெருங்கும் போதும் மிதிபலகையில் உள்ள பயணிகளை மேலே ஏறும்படி நச்சரித்து அடைத்து ஏற்றிவிட்டு தரிப்பிடத்தில் நிற்பவர்களை ஏற்றி மிதிபலகையில் வைத்துக்கொண்டு மீண்டும் பயணம் தொடர்வது வழமையாகிவிட்டது.சம்பவம் குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments