நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படாத காரணத்தால் திடீர் நோயால் பாதிப்படையும் பொதுமக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் திண்டாடுகின்றனர்.இந்த வைத்தியசாலைக்கு மாலை நேரம் மட்டும் வைத்தியர் ஒருவர் வந்து சிகிச்சை வழங்கி வருகின்றார். இதன் காரணமாக இந்தப் பகுதி மக்கள் மாலை நேரம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டியுள்ளது.மருத்துவ தேவை என்பது அடிப்படைத் தேவையாக உள்ள பட்சத்தில் நயினாதீவைச் சேர்ந்த மக்கள் வைத்தியசாலை இருந்தும் சிகிச்சை பெறமுடியாமல் நீண்ட தூரம் பயணித்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.இதனால் திடீர் நோயால் பாதிப்படையும் நோயாளிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நிரந்தர வைத்தியர் ஒருவரை வைத்தியசாலையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வைத்தியசாலையில் கடந்த காலங்களில் மூன்று வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்தனர். தற்போது சில காலம் ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்கள் கடமையாற்றிய போதும் நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு பல தடவை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை அது கவனிக்கப்படாத நிலையில் தற்சமயம் புங்குடுதீவில் இருந்து தினமும் பிற்பகல் ஒரு வைத்திய அதிகாரி வந்து நோயாளரைப் பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments