எழுதுமட்டுவாள் வடக்கு கிராம அலுவலர் கே. ஞானேஸ்வரன் அலுவலத்தில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து தென்மராட்சி பிரதேச கிராம அலுவலர்களும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் நேற்று பிரதேச செயலகம் முன்பாக ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியவர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தமது பாதுகாப்பு கருதி கிராம அலுவலர்கள் தமது நாளாந்த கடமைகளை பிரதேச செயலகத்தில் வைத்து மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் கிராம அலுவலர்கள் கிள்ளுக்கீரையா?, காடையர்கள் கையிலா சட்டம், கிராம அலுவலரைத் தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக இனங்கண்டு சட்டத்துக்கு முன் நிறுத்துக, கிராம அலுவலர் அலுவலகத்திலிருந்து கடமையாற்றுவதற்குப் பாதுகாப்பு வலியுறுத்தப்படல் வேண்டும், 07.05.2012 இல் கிராம அலுவலர் க.ஞானேஸ்வரன் அலுவலகத்தில் வைத்துக் காடையர்களால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்னும் பதாகைகள் தாங்கிய வண்ணம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பணிப்புறக்கணிப்பின் பின்னர் யாழ்.அரச அதிபருக்கான மனு ஒன்று பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.

Comments