ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து தனியார் பஸ் நடத்துநர் ஒருவரும் சாரதி ஒருவரும் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

கண்மண் தெரியாமல் தாக்கப்பட்ட இருவரையும் ஓமந்தை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். முதலில் தனியார் பஸ் நடத்துநரைத் தாக்கிய காலில்லாத இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை இந்த இருவரும் தாக்கியதாக ஓமந்தை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே நடத்துநரும் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கவீனரான சிப்பாய் தனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்மையாகவே காயமடைந்த தனியார் பஸ் நடத்துநரும், சாரதியும் ஓமந்தையில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை முன்னிரவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்துள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்த சிவிலுடையில் வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பின்னால் வந்த கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் வழியில் மாறி ஏறியுள்ளார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வவுனியா பஸ் ஒன்றில் மிதி பலகையில் பயணம் செய்த பயணி ஒருவர் பின்னால் வந்த பஸ் வண்டிக்கு கைகளினால் சைகை காட்டிய வண்ணம் வந்துள்ளார்.
இதனை அவதானித்த பயணியான அங்கவீனமான முன்னாள் இராணுவச் சிப்பாய் எழுந்து சென்று மிதி பலகையில் பயணம் செய்த பிரயாணியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டாராம். இந்த வாய்த்தர்க்கத்தையடுத்து அங்கவீனராகிய சிப்பாய் அந்தப் பயணியைத் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து பயணியும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பஸ் வண்டி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியை வந்தடைந்தது.
சோதனைச் சாவடியின் நடைமுறைக்கமைய நடத்துநர் இறங்கிச் சென்று வாகன இலக்கத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தபோது பஸ் வண்டியின் பின்பக்கத்தில் வைத்து அவரை மறித்த அங்கவீனராகிய முன்னாள் சிப்பாய் அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். ஆசனத்தில் இருந்தபடி, சைட் கண்ணாடி வழியாக இதனை அவதானித்த சாரதி இறங்கிச் சென்று நடத்துநரை ஏன் அடிக்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு அங்கிருந்த வேறு இராணுவத்தினரும் இணைந்து கூட்டமாகச் சேர்ந்து நடத்துநரையும் சாரதியையும் கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவ நேரத்தில் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் வண்டி மற்றும் வவுனியா நோக்கி வந்த பஸ் வண்டி ஆகியவற்றில் வந்த பயணிகள் அனைவரும் நேரில் கண்டுள்ளனர்.
இவ்வாறு தாக்கியதன் பின்னர், பின்னால் வந்த கொழும்பு பஸ் வண்டியில், முன்னால் வந்த வவுனியா பஸ் வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்றி ஏற்றி அனுப்பி வைத்த ஓமந்தை சோதனைச் சாவடி இராணுவத்தினர் வவுனியா பஸ் வண்டியைத் தடுத்து வைத்துக்கொண்டு தாக்கப்பட்ட பஸ் நடத்துநர், சாரதி ஆகியோரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன், இவர்களால் தாக்கப்பட்டதாகப் பொய் முறைப்பாடு செய்த அங்கவீனரான முன்னாள் சிப்பாயை வழிப்பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
நீதி நியாயத்திற்கு மாறாக தான்தோன்றித்தனமாக ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் நடந்து கொண்ட விதத்தை நேரடியாகக் கண்ட பயணிகள் அனைவரும் அச்சத்திற்கு உள்ளாகினார்கள். பொதுமக்களுடன் சுமுகமாகப் பழக வேண்டிய இராணுவத்தினர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்களே என்று பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

Comments