மாகாணத்துக்கென குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வடமாகாணத்தில் உள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்துக்கு இந்த ஆண்டு 14 திட்டங்களைச் செயற்படுத்த 34 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என வடமாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி காணி நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்டீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
கால்நடை உற்பத்தியில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள பயனாளிகள் 300 பேருக்கு 2மாதக் கோழிக்குஞ்சு வழங்குவதற்கு 3.35 மில்லியன் ரூபாவும், வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள சிறிய அளவிலான கோழிவளர்ப்போருக்கான உதவிகளுக்கு 1.6 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள 10 அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களில் உணவு, மருந்து கொள்வனவுக்கு 2.5 மில்லியன் ரூபாவும், மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச  கால்நடை வைத்தியர் விடுதியிலும், பண்ணை அலுவலகத்திலும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 3.2 மில்லியன் ரூபாவும் வவுனியா மாவட்டத்தில் உள்ள விடுதி புனரமைத்தல், உணவு களஞ்சியங்களை வளப்படுத்துவதற்கு 2.5 மில்லியன் ரூபாவும், 5 மாவட்டங்களிலும் உள்ள கால்நடை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கு தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒரு மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாங்குளம் உதவிப் பணிப்பாளர் பணிமனை நிர்மாணத்துக்கு 3 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 மாவட்டங்களிலும் இனவிருத்திக்காக நல்லினக் கடாக்கள் வழங்குவதற்கு 0.7 மில்லியன் ரூபாவும், நல்லினக் காளைகள் வழங்குவதற்கு 1.5 மில்லியன் ரூபாவும், 100 பெரிய பண்ணைகளுக்காக பட்டிகளை அமைப்பதற்கு 2 மில்லியன் ரூபாவும், 100 குடும்பங்களுக்கு 2 ஆடுகள் வீதம் விநியோகிப்பதற்கு ஒரு மில்லியன் ரூபாவும், 48 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை 2ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு வழங்குவதற்கு 6 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு 100 பெரிய பண்ணைகளுக்கான பட்டிகளை அமைப்பதற்கு 3.60 மில்லியன் ரூபாவும், ஆடுகளுக்கான 100 கொட்டகைகள் அமைப்பதற்கு 2 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

Comments