மானிப்பாயில் ஒரு வருடத்துக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுவன் யாழ். நகரப் பகுதியில் முஸ்லிமாக மாற்றப்பட்ட நிலையில் அவனது தாயரால் மீட்கப்பட்டான். இந்தச் சிறுவன் காத்தான்குடியில் வீடு ஒன்றில் கொத்தடிமையாக வேலைக்கு அமர்த்தப்பட்டது தெரிய வந்த நிலையில் குடாநாட்டில் இருந்து சிறுவர்கள் கொத்தடிமைகளாக கடத்தப்படுகின்றனர் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சண்டிலிப்பாய், மாகியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு கடந்த வருடம் ஜூன் மாதம் 8 ஆம் திகதி கடத்தப்பட்டு அண்மையில் யாழ். நகரில் வைத்து மீட்கப்பட்டான்.
குறித்த சிறுவன் சண்டிலிப்பாய் இரட்டைப் புலம் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சென்றகொண்டிருந்த வேளை கடந்த வருடம் காணமற்போனதாக அவரது தாயாரால் மானிப்பாய் பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சிறுவன் யாழ். நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் முஸ்லிம் உடையணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான் இதனை அவதானித்த சிறுவனது அயலவர்கள் சம்பவத்தை தாயாருக்கு தெரியப்படுத்தினர்.
தாயார் மானிப்பாய் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனை இனம் கண்டுள்ளார். பொலிஸார் சிவில் உடையில் ரஜிராமை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூன்று முஸ்லிம்களையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நான்காவது சந்தேக நபரும் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிவான் சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தல் சம்பவம் குறித்து சிறுவன் தெரிவித்ததாவது:
“நான் சம்பவ தினத்தன்று பாடசாலை நோக்கி சீரணிச் சந்திக்கு சென்று கொண்டிருந்தேன். ஹைஏஸ் வாகனத்தில் வந்த இரண்டு பேர் உனக்கு அப்பா இருக்கிறாரா என்று கேட்டனர்.
இல்லை என்றேன். அம்மா இருக்கிறார என்று கேட்டனர். ஆம் என்றேன். தங்களுடன் வருமாறு கேட்டு எனது கையைப்பிடித்து ஏற்றி சென்று விட்டனர். அவர்கள் என்னை யாழ். நகரில் உள்ள வீடொன்றுக்குள் அழைத்துச் சென்று பாடசாலைச் சீருடையை மாற்றி சாரமும் சேட்டும் அணிவித்தனர். பின்னர் மட்டக்களப்பு காத்தான் குடிக்கு கொண்டு செல்ல வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சுன்னத்துச் சடங்கு செய்தனர்.
வைத்தியர் ஒருவரே அதனைச் செய்தார். அத்துடன் எனக்கு அன்வர் எனப் பெயரும் வைத்தனர். நஜீப் என்பவரது வீட்டிலே நான் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். அங்கு தினமும் காலை 6 மணிக்கு எழுந்து பதுரியா பள்ளி வாசலில் குடிதண்ணீர் அள்ளி குறித்த வீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.
அவர்களின் 6 ஆம், 7 ஆம் தரத்தில் படிக்கும் இரண்டு பிள்ளைகளை சைக்கிளில் கூட்டிச் சென்று அழைத்து வர வேண்டும் இடைநேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.
இந்த நிலையிலேயே நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் ஜெமில் என்பவர் என்னைக் கொண்டுபோய் சேர்த்து விட்டார். அங்கிருந்தே நான் எனது தாயாரால் மீட்கப்பட்டேன் என்றான் சிறுவன்.
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கடத்தப்பட்டு கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிய வந்த நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த சிறுவனின் தந்தையார் 4 வருடங்களுக்கு முன்னதாக நோய் காரணமாக இறந்து விட்டார். சிறுவனுக்கு சகோதரனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Comments