இலங்கையுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காக, புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா, இலங்கைக்கு மிக நெருக்கமாக உச்சிப்புளியில் நிறுவியுள்ளது.
இராமநாதபுரத்தில் உள்ள உச்சிப்புளியில் இயங்கும் ‘ஐ.என்.எஸ் பருந்து‘ என்று அழைக்கப்படும் இந்தியக் கடற்படையின் விமானதளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து இந்தப் புதிய அணி செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இந்த ஆளில்லா உளவு விமான அணியை ஆரம்பித்து வைத்தார்.
INAS 344 என்று அழைக்கப்படும் இந்த அணி, இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆளில்லா உளவு விமான அணியாகும்.
இந்தத் தளத்தில் இருந்து முதற்கட்டமாக, இஸ்ரேலியத் தயாரிப்பான மூன்று உளவு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
விரைவில் மேலும் இரண்டு உளவு விமானங்கள் இந்த அணியில் சேர்க்கப்படவுள்ளன.
இவை அதிநவீன வசதிகளைக் கொண்டவை என்பதுடன், இலங்கை விமானப்படையிடம் உள்ள ஆளில்லா உளவு விமானங்களை விடத் துல்லியமான படங்களையும், தகவல்களையும் வழங்கக் கூடியவையாகும்.
இலங்கையில் அதிகரித்து வரும் சீனத் தலையீடுகளை அடுத்து பிராந்திய ரீதியாக இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி வரும் நிலையிலேயே, இலங்கைக்கு மிக நெருக்கமாக இந்தியா இந்த உளவு விமான அணியை நிறுத்தியுள்ளது.
மேலும் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதில் காணப்படும் உண்மை நிலவரங்களை கண்டறியவும் ஆளில்லா உளவு விமானங்கள் உதவும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
























