முதல் தடவையாக அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் தனது 150 ஆவது ஆண்டு நிறைவை அடுத்த மாதம் கொண்டாடவுள்ள நிலையில், 15 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் வட மாகாண சம்பியனாகி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.

 அரியாலை கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண 15வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயமும், அராலிசரஸ்வதி மகாவித்தியாலயமும் மோதிக்கொண்டன.
முதல் பாதி ஆட்டத்தில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் 7:5 புள்ளிகள்  முன்னிலையில் நின்ற வேளையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயம் வெற்றியை தனது பக்கம் கொண்டுவர வேண்டும் என்ற துடிப்புடனும், அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் அதனை தடுத்து வெற்றியை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேகத்துடனும் விளையாடின. ஆயினும் இறுதியில்  மீண்டும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலத்தின் கையே ஓங்கியது. 4:1 புள்ளி என்ற அடிப்படையில் அராலி சரஸ்வதி வித்தியாலய அணி முன்னிலை பெற்ற போது இரண்டாம் பாதி ஆட்டமும் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் 11:6 புள்ளிகள் என்ற அடிப்படையில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலய அணியை வெற்றி கொண்டு மாகாணச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

Comments