சில சுயநலவாத கசாப்புக் கடை முதலாளிமார் இன்று கிடைப்பதற்கு அரிதாக இருக்கும் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியையும் கன்றுக்குட்டிகளின் இறைச்சியையும் கலந்து ஆட்டிறைச்சியாக விற்று, மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதாக பொலிஸாருக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்திருக்கிறது. இவை கொழும்பிலும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களிலும் உள்ள ஒரு சில இறைச்சிக் கடைகளில் விற்கப்படுவதாக பொலிஸார் மற்றும் மிருக நலன்புரி சங்க உறுப்பினர்களும் ஊர்ஜிதம் செய்துள்ளனர். தற்போது கொழும்பிலும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களிலும் இருக்கும் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை திடீரென்று வீழ்ச்சியடைந்திருப்பதற்கு அவை இறைச்சி கடைகளில் விற்கப்படுவதே காரணம் என்றும் இவர்கள் தெரிவித்தார்கள். கட்டாக்காலி நாய்களின் மூலம் விசர் நாய்க்கடி நோய் பரவி வருவதாக கொ ழும்பு மாநகர சபையின் மிருக வைத்திய பிரிவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி கொள்ளுப்பிட்டியில் உள்ள சில ஹோட்டல்களுக்கு அருகில் இருந்த 10 கட்டாக்காலி நாய்கள் திடீரென்று காணா மல் போனதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். இது பற்றி தகவல் தெரியவிரும்பும் ஊடகவியலாளர்களிடம் சில கசாப்புக் கடை முதலாளிமார் ஆத்திரப்பட்டு ஏசுவதாகவும் ஓரிருவர் நாய் இறைச்சியை விற்பனை செய்யாவிட்டாலும் சில சமூக விரோதிகள் அவ்விதம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன, கொழும்பிலும் சுற்றுப்புறங்க ளிலும் நாய்கள் திடீரென காணாமல் போனது பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தாலும் அவை எங்கு சென்றிருக்கின்றன என்பது பற்றி எங்களுக்கு தெரியாது என்றும் கூறுகிறார்.

Comments