யோசப்வாஸ் மற்றும் யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளார்களால் 1700 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்திய மலைநாட்டில் மாத்தளை மாவட்டத்தில் ஓலையினால் அமைக்கப்பட்ட இந்த வஹாக்கோட்டை தேவாலயமே இலங்கையில் முதன் முதல் அமைக்கப்பட்ட அந்தோனியார் தேவாலயம் என தேவாலயத்தின் அருட் தந்தை தெரிவித்தார்.
2ஆம் விமலதர்ம சூரிய மன்னன் கண்டியை ஆட்சி செய்த காலத்தில் நிலவிய கடும் வரட்சி காரணமாக எல்லா மதத் தலைவர்களையும் மழை வேண்டி பிரார்த்திக்கும் படி ஆணையிட்டான். இதன் போது யோசப்வாஸ் அடிகளார் இந்த வஹாக்கோட்டை ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 3 நாட்கள் தொடர்ந்து ஜெபித்து மழையை வரவழைத்ததாக வரலாறு கூறுகின்றது.

இந்த ஆலயம் 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். இங்கு ஆனி மாதத்தில் ஊர் மக்களுக்கு ஒன்றும் யாத்திரீகர்களுக்கு ஒன்றும் என இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன என தேவாலயத்தின் அருட் தந்தை மேலும் தெரிவித்தார்.
இந்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலுவைப்பாதையைத் தரிசிக்க ஏராளமான உள்நாட்டு ,வெளிநாட்டு யாத்திரீகர்கள் தினமும் வருகை தருவதோடு இங்கு அமைக்கப்பட்டுள்ள மாதா, மக்களுக்குக் காட்சியளித்த வெவ்வேறு நிலையிலான 20 மாதா சுரூவங்களை இலங்கையில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும் என்றும் தேவாலயத்தின் அருட் தந்தை தெரிவித்தார்.

யாத்திரைக் காலம் இல்லாத காலத்திலும் அதிகளவான பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் இங்கு யாத்திரை மேற்கொள்வதாகவும் ஆலய அருட் தந்தை தெரிவித்தார்.
























