துல்லியமான பந்து வீச்சாலும், நிலக்ஷனின் அபார துடுப்பாட்டத்தினாலும் சென்.பற்றிக்ஸ் அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தை இலகுவாக வெற்றிகொண்டது.

 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றுக்கான ஆட்டமொன்று அண்மையில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய அணி மோதிக்கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதற்கமைய துடுப்பெடுத்தாடிய வவுனியா செட்டிக்குள மகாவித்தியாலய அணி, பற்றிக்ஸ் அணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் பணிந்தது. அந்த அணி 23.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதில் பத்மப் பிரியன் 7 ஓட்டங்களையும், நிருசன் ஆறு ஓட்டங்களையும் தமது அணிசார்பாகப் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பில் ஜெரிக்ஸன் 10 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், கொலின்ஸ் 11 ஓட்டங்களைக்கொடுத்து 3 இலக்குகளையும் கிரிசாந்தன் 15 ஓட்டங்களைக்கொடுத்து 2 இலக்குகளையும், அகிபன் ஒரு இலக்கினையும் கைப்பெற்றினர்.
62 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி எனப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிலக்ஸனின் அபார துடுப்பாட்டத்தினால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 6.4 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் ஒரு இலக்கினை மாத்திரம் இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றது.
 இதனால் பற்றிக்ஸ் அணி 9 இலக்குகளால் வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய அணியை வெற்றிகொண்டது. இதில் நிலக்ஸன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காது 36 ஓட்டங்ளையும் கிரிசாந்தன் 6 ஓட்டங்களையும், ஜெனிலதாஸ் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களையும் தமது அணிசார்பாகப் பெற்றுக்கொண்டனர். உதிரிகளாக 17 ஓட்டங்கள் பெறப்பட்டன.
பந்துவீச்சில் வவுனியா செட்டிக்குள அணி சார்பில் சபேசன் 11 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு இலக்கினைக் கைப்பற்றினர். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தனது 2 ஆவது சுற்றின் முதல் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணியை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments