தைப்பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் தலைவர்கள் ஒன்றியத்தினால்  முதல் முறையாக பாடசாலைகளின் 21 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையே  நடத்தப்பட்ட 11 பேர் பங்குபற்றும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித் தொடரில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனானது.

 இந்தத் தொடரின் இறுதியாட்டம் கடந்த திங்கட்கிழமை மானிப்பாய் இந்துக் கல்லூரி  மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதிக் கொண்டது
.
முதல் பாதியாட்டம் ஆரம்பமான போது இரு அணியினரும் தத்தமது அணிக்கான கோல்களை பெறும் நோக்கோடு எதிர் அணியினுடைய கோல்பரப்பினை முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர்.
இதன்போது மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி வீரர் றொனால்ட் தனக்குக் கிடைத்த கோல் பெறும் சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்தி தனது அணிக்கான  முதலாவது கோலினை அடித்தார்.இதனால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினர் பதிலுக்கு கோல்கள் பெறத் தொடர்ந்தும் முயற்சித்தனர். எனினும் மானிப்பாய் இந்து அணியின் பின்கள வீரர்களின் தடுப்பாட்டத்தினால் யாழ்ப்பாணக் கல்லூரி அணியால் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.
இதேவேளை மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியின் வீரர் அகிலன் தமது அணிக்கான இரண்டாவது கோலினை அடித்தார்.
ஆட்டம் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்ட போது மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம்பாதி ஆட்டம் ஆரம்பமான போது மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி தமது ஆட்டத்தினை வேகப்படுத்தியது.
இதன் பயனாக மானிப்பாய் இந்துவின் ஜீவராஜ் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தனது அணிக்கான மூன்றாவது கோலினை அடித்தார்.
பதிலடி கொடுக்க வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினர்  ஆக்ரோஷமாக மோதினர். எனினும் இறுதிவரை அவர்களால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியவில்லை.ஆட்ட நேர முடிவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 3:0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி சம்பியனானது.
இதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கும் இடையில் மூன்றாமிடத்துக்கான ஆட்டம் நடைபெறவிருந்தது.
எனினும் போட்டி நேரத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி மைதானத்துக்கு சமூகம் தரவில்லை. இதனால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ். மாவட்ட விளையாட்டுத்துறை பதில் அதிகாரி  எம்.ஆர்.மோகனதாஸ் கௌரவ விருந்தினர்களாக மானிப்பாய் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர் மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் தலைவர் ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் ராகுலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments