வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மக்களிடம் பெருந்தொகையான பணத்தினை கொள்ளையடித்த போதகர் என நடித்துத்திரிந்த ஒருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதகர் போல நடித்து ஆட்களை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி மக்கள் பலரிடம் 2 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தினைக் கொள்ளை அடித்துக் கொண்டு தலைமறைவாக முற்பட்ட ஒருவரை யாழ். குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருபாலையைச் சேர்ந்த குறித்த நபர் தன்னை ஒரு போதகர் என கூறிக்கொண்டு மக்கள் நம்பும் அளவிற்கு குறித்த சில காலங்கள் செயற்பட்டுள்ளார்.

அதனை சாதகமாகப் பயன்படுத்தி யாழ்ப்பாணம், நல்லூர் , கோப்பாய், இருபாலை, கொழும்புத்துறை, திருநெல்வேலி என பலபகுதிகளில் இருந்தும் 19 மேற்பட்டவர்களிடம் 2 கோடிக்கு மேற்பட்ட பணத்தினை இவர் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் என 12 பேர் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே அவர் கைது  செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருடன் மலையகத்தைச் சேர்நத ஒருவரும் தொடர்பு பட்டுள்ளார். அவரும் தன்னைப் போதகர் என்று கூறியே செயற்பட்டுள்ளார். எனினும் அவர் இங்கு இல்லாத காரணத்தினால் அவரை கைது செய்யமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில்,

தன்னை போதகர் என அடையாளப்படுத்தியதால் இவரது செயற்பாடுகளை நாங்கள் நம்பினோம். அதனால் அவர் எமது மதத்தின் அடிப்படையிலேயே கனடாவிற்கு ஆட்களை அனுப்பி அங்கு வேலை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுப்பதாக கூறியிருந்தார்.

அத்துடன் தான் அனுப்பியவர்கள் என்ற பெயர் விபரங்களையும் எங்களிடம் காட்டி எங்களை நம்ப வைத்து எங்களிடமிருந்து பணத்தினைப் பெற்றுக் கொண்டார்.

நாங்களும் வறுமையான குடும்பத்தினர். இருப்பினும் இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும் போது போய்விடலாம் என்று நினைத்து நகைகளை விற்றும் அடகு வைத்தும் காணியை ஈடு வைத்தும் 20 இலட்சம் 30 இலட்சம் என இலட்சக் கணக்கில் பணத்தை கொடுத்துவிட்டோம்.

இந்த விடயத்தில் இவர் மட்டும் சம்பந்தப்படவில்லை மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார். மலையகத்தைச் சேர்ந்த அவரும் தன்னையும் ஒரு போதகர் என்றே கூறிவந்திருந்தார்.

குறித்தவர் மற்றய போதகருக்கு இங்கிருந்து ஒரு கோடிக்கு மேல் வங்கி ஊடாகப் பணம் அனுப்பியிருந்தமை தெரியவந்துள்ளது.

நாங்களும் மதத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் என்பதால் இவர்களை நம்பினோம். அவர்களை நம்பித்தான் நாங்கள் இவ்வளவு பெருந்தொகையான பணத்தைச் செலவு செய்தோம்.

கடந்த காலங்களில் குறித்த நபர் ஒரு வேளை உணவிற்கே கஸ்ரப்பட்டுக் கொண்டிருந்தவர். தீடிரென வீடுகள், காணிகள், வாகனங்கள் வாங்கியுள்ளார். அப்போ நாங்கள் இவரது நடவடிக்கைகளைக் கவனித்திருக்க வேண்டும் தவறு செய்துவிட்டோம்.

இப்போது எங்களிடம் காதுத்தோட்டைத்தவிர வேறு எதுவும் நகை என்று சொல்லிக் கொள்ள இல்லை. எல்லாத்தையும் இழந்து விட்டோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பொலிஸார் மேலதிக விசாரைணைகளை மேறகொண்டு வருகின்றனர்.

Comments