யாழில் நாய்க்கடிக்கு இலக்காகிய 30 பேர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளமை யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு புள்ளிவிபரத் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரையிலான 30 பேர் நேற்று மட்டும் நாய்க்கடிக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேவேளை,கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களின் கடிக்கு இலக்காகியவர்கள் தாமதிக்காது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2010,2011 ஆம் ஆண்டுகளில் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு 16 பேரும் 2011 ஆம் ஆண்டு 14 பேரும் நாய்க்கடிக்கு இலக்காகி மரணித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு அம்பாறையில் ஒருவரும், மட்டக்களப்பில் ஐவரும், திருகோண மலையில் இருவரும் பலியாகியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பேரும் மரணமடைந்துள்ளனர்.வடக்கை பொறுத்தவரையில் 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments