njii

யாழ்.குடாநாட்டில் மின்சாரம் நேரகாலம் எதுவும் இன்றி கண்ட கண்ட நேரங்களிலும் திடீர் திடீரெனத் தடைப்படுவதால், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாமல் திண்டாடுகின்றனர்.   ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நெருங்கிவரும் இந்த வேளையில் மின்சாரம் தடைப்படுவதால், பிள்ளைகளின் கல்வி நிலை குறித்து பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.   “பரீட்சைக் காலங்களில் மின்சார சபையினர் இப்படி ஏன் நடந்து கொள்கிறார்கள்?” என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வீதி அகலிப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

அதுவும் கூட குறித்த நேரத்தை விட அதிக நேரம் இரண்டு மணித்தியாலத்துக்கு அதிகமாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.   “பிள்ளைகள் படிக்கும் நேரங்களில் விடியற்காலை, மாலை வேளைகளில் மின்சாரம் தடைப்படுவதால், அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு, வேறு கருமங்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் சில பிள்ளைகள் நித்திரையில் மூழ்கி விடுகின்றனர்” இப்படிப் பெற்றோர்கள் கூறுகின்றனர்.    இதேவேளை, வலி.கிழக்கு மற்றும் வடமராட்சி பகுதியை உள்ளடக்கிய மின்சார விநியோக வலயத்தில் அதிகாலையில் 5 மணிக்கும் மாலையில் 6-6.30 மணியளவிலும் திடீரென மின்வெட்டு நடைபெறுகின்றது.

அது சில மணிநேரம் தொடருகின்றது. இது தொடர்பாக மின்சாரசபையினர் எந்தவிதமான விளக்கமும் கொடுப்பதில்லை என்றும் மின்பாவனையாளர்கள் கூறுகின்றனர்.   அதிகாலை 5 மணிக்கு அல்லது அதற்கு முன்பாகவோ மேற்கொள்ளப்படும் மின்வெட்டால் மாணவர் அதிகாலையில், அமைதியான வேளையில், இயல்பு நிலையில் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமல் போய்விடுகின்றது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.   தொழிலுக்குச் செல்லும் தாய்மார்கள் மற்றும் பெண்கள் சமையல் மற்றும் காலை உணவு தயார்படுத்தல் வேலைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகி விடுகின்றனர் என்றும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.   மின்வெட்டுக்கான காரணத்தையோ அல்லது மின்சார மீண்டும் எத்தனை மணிக்கு வரும் என்பதை அறிவ தற்கோ மின்சாரசபை மின் விநியோகப் பகுதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தால் தொடர்பும் கிட்டுவதில்லை என்று மின் பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Comments