ctbjaffna1 (1)

தென்மராட்சி பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தினால் சரியான கட்டணம் அறிவிடப்படும். ஆனால் தற்பொழுது சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படவில்லை. இதனால் அதிக கட்டணங்கள் அறிவிடப்படுகிறது.

தென்மராட்சி பிரதேசங்களான சாவகச்சேரி, கொடிகாமம் போன்ற நகரங்களில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளில் பொலிஸ் பிரிவு அடையாளங்களும் பொருத்தப்படவில்லை. விபத்துக்கள் குற்றச் செயல்கள் ஏதாவது இடம்பெற்றால் எந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  முச்சக்கர வண்டி என அடையாளம் காண்பதற்கு இவ் இலச்சினை மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

எனவே தென்மராட்சி பிரதேசங்களில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதோடு பொலிஸ் பிரிவு இலச்சினையும் பொறிக்கப்பட்டால் பிரயாணிகள் பெரிதும் நன்மையடைவார்கள் என பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பேருந்து சேவைகள் சீரின்மையால் வடமராட்சி கிழக்கில் மக்கள் பாதிப்பு

வடமராட்சி கிழக்குப் பகுதிகளுக்கான அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் சீராக இடம்பெறாமையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை – மருதங்கேணி வீதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளமையினாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வடமராட்சி கிழக்குப் பகுதிகளான நாகர்கோவில், மாமுனை, செம்பியன்பற்று, நெல்லியான், தாழையடி, மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு, உடுத்துறை, வத்திராயன், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, போக்கறுப்பு, கேவில் ஆகிய பகுதிகளுக்கான பயணிகள் பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட நேர ஒழுங்குமுறையில் இடம்பெறாமையினால் இப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலையின் பயணிகள் பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட நேர ஒழுங்குகளுக்கு அமைய இடம்பெறுவதில்லை எனவும் இதனால் இப் பிரதேசத்தில் உள்ள மாணவர்களும் இப்பிரதேசத்திற்குக் கடமையாற்றச் செல்கின்ற அரச மற்றும் அரச சார்பற்ற பணியாளர்களும் பாதிப்படைவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு வரையான பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகள் எந்தவொரு முன்னறிவித்தலுமின்றி திடீரென இடைநிறுத்தப்படுவதாலும், இத்தனியார் பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சேவையை ஆரம்பிக்காமையினாலும், சேவையின் பொழுது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நேரவிரயத்தை ஏற்படுத்துவாலும் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தனியார் பேருந்துச் சேவையாளர்களிடம் சேவை ஒழுங்கு மீறல்கள் தொடர்பாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்ற பொழுது இப்பேருந்துகளில் கடமையாற்றுகின்ற சாரதிகளும் நடத்துநர்களும் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொள்வதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அரச பேருந்துச் சேவையிலும் நேர ஒழுங்குகள் பின்பற்றப்படாமையினாலும் மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பயணிக்கின்ற பேருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் அல்லது பின்னர் சேவையிலீடுபட அனுமதித்துள்ளமையினாலும் தாம் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Comments