ro

யாழ்.சுன்னாகம் தெற்குப் பகுதியில் மரக்கறி வகையைச் சேர்ந்த பீற்றூட் அமோகமாக விளைந்துள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இப் பகுதியில் பீற்றூட் அறுவடையில் ஈடுபட்டிருந்த இ.கண்ணன்(வயது-42)கருத்துத் தெரிவிக்கையில்,

நான் மொத்தமாக 40பரப்பில் விவசாயம் செய்கிறேன்.அதிலே 10பரப்பில் இம்முறை பீற்றூட் பயிரிட்டேன்.

கடந்த ஆனிமாத இறுதியில் நடப்பட்ட பீற்றூட்டே இப்ப அறுவடை செய்யப்படுகிறது.சரியான பராமரிப்பிருந்தால் பீற்றூட் விளைய இரண்டு மாதங்கள் போதுமானதாகும்.

போன வருடம் விளைச்சலும் விலையும் அதிகமாகவிருந்ததால் எனக்கு நிறைய இலாபம் கிடைத்தது. ஆனால் இந்தத் தடவை விளைச்சல் அதிகமாகக் கிடைத்த போதும் ரூபா12 வரையிலேயே எம்மிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்பாராத ஏமாற்றத்தையும் பாதிப்பையும் எதிர்நோக்கியிருக்கிறோம்.கடந்த ஒன்றரை மாத காலமாக சந்தையில் விலை குறைவு நீடிக்கிறது. இதற்குக் காரணம் இப்போது இங்கு அதிகமாக பீற்றூட் செய்கை பண்ணப்படுவதே என்றார்.

இங்கு பீற்றூட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த லொறி உரிமையாளரான சுன்னாகத்தைச் சேர்ந்த நா.உதயகுமார் கருத்துத் தெரிவிக்கையில், நான் கடந்த 08வருட காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

மரக்கறிப் பொருளின் சேர்மானத்தைப் பொறுத்துத் தம்புள்ளச் சந்தைக்கும் சிலவேளைகளில் கொழும்புக்கும் ஏற்றிக் கொண்டு போறனாங்கள்.

இப்ப வாகனங்கள் கூடினதால வரவர உழைப்பு வாய்ப்புக்கள் குறைந்து செல்லும் நிலை தோன்றியுள்ளது என்றார்.

தற்போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பீற்றூட் அறுவடை இடம்பெற்று வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Comments