po

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் 188 மருத்துவ அதிகாரிகளில் 87 பேருக்கு இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளில் இருக்கின்ற சகலரும் இடமாற்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை மட்டுமே வடமாகாணத்தின் ஒரே ஒரு மூன்றாம் நிலை வைத்தியசாலை ஆகும். இங்கு ஏற்கனவே 140 க்கு மேற்பட்ட வைத்தியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது.

இடமாற்றம் பெற்றுள்ள வைத்தியர்கள் அனைவருமே மிகுந்த அனுபவம் உள்ளவர்கள். உதாரணத்துக்கு சத்திர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் இடமாற்றம் பெற்றுள்ள வைத்தியர்களின் பங்களிப்புடனேயே இலங்கையிலேயே மிகக்குறைந்த கால காத்திருப்புடன் சத்திர சிகிச்சைகளை இங்கு செய்ய முடிகிறது.

பல சத்திர சிகிச்சை பிரிவுகளில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக இடமாற்றப்படவுள்ளனர்.  இவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமமனம் பெறவுள்ள வைத்தியர்களுள் 58 பேரை நியமிப்போம் என வாக்குறுதி தரப்பட்டுள்ளது.  ஆகவே சாதாரணமாகவே 30 வைத்தியர்களுக்கான வெற்றிடம் மேலதிகமாக உருவாகும்.

வாக்களிக்கப்பட்ட 58 பேரில் எத்தனை பேர் ஈற்றில் உண்மையாக நியமனம் பெறுவார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.  இவர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டாலும் ஏற்படவுள்ள 87 வெற்றிடங்களை நியமிக்கப்படக்கூடிய 58 பேரரால் முழுவதாக நிரப்ப முடியாது. அதை விட இவர்கள் உரிய அனுபவங்களைப் பெற குறைந்தது 1 – 2 வருடங்கள் செல்லும்.

மேலும் இவர்கள் அனைவரும் வருடாந்த இடமாற்றம் பெறுபவர்களை பதிலீடு செய்யவே நியமிக்கப்படுவதால் ஏற்கனவே உள்ள 140 வெற்றிடங்கள் ஒரு போதும் நிரப்பப்படப்போவதில்லை.

இதய சிகிச்சைப்பிரிவு, நரம்பியல் சத்திர சிகிச்சைப்பிரிவு, மயக்க மருந்துப்பிரிவு போன்ற பல்வேறு முக்கியமான பிரிவுகளில் நிலவும் பாரிய ஆளணிப் பற்றாக்குறை தொடர்ந்து நிலவும்.

மேலும் சுகாதார அமைச்சின் நடைமுறையின் படி வட கிழக்கில் புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் ஒரு வருடத்துடன் தெற்கில் உள்ள பிரபல வைத்திய சாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடமாற்றம் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இங்கு தொடர்ந்து சேவையாற்றும் வைத்தியர்களை இடமாற்றம செய்துவிட்டு ஒரு வருடத்தில் விரும்பினால் இடமாற்றம் பெறக்கூடியவர்களே நியமனம் பெறவுள்ளனர்.

இந்த நிலைமையால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சமுற்ற வைத்திய நிபுணர்களும் பணிப்பாளரும் நேற்றுமுன்தினம் சுகாதார அமைச்சின் செயலாளரை சந்தித்து நிலைமையை விளக்கினர்.

தெற்கில் மேலதிக வைத்தியர்கள் உள்ள வைத்திய சாலைகளில் செய்வதுபோல் இடமாற்றங்களை யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடியாக செய்ய முடியாது என்பதை செயலாளரும் ஏற்றுக்கொண்டார்.

மேலும் தெற்கில் உள்ள வைத்திய சாலைகளில் இருந்து இடமாற்றம் பெறுகின்ற வைத்தியர்களுக்கு பதிலாக அனுபவம் உள்ள வைத்தியர்களே பதிலீடாக வரவுள்ளனர்.

நடைபெற்ற கலந்துரையாடலின் பின் செயலாளர் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு இட மாற்றங்களை அமுல்படுத்தும் போது வைத்திய சாலையின் சேவைகள் பாதிப்புறாதவாறு பார்த்துக்கொள்ள அதிகாரமளித்துள்ளார்.

மேலும் பதிலீடாக வரும் வைத்தியர்கள் உரிய அனுபவம் பெறும் வரை இடமாற்றங்களை அமுல்படுத்தத்தேவை இல்லை எனவும் படிப்படியாக அமுல்படுத்தினால் போதும் எனவும் அறிவுத்தியுள்ளார்.

இந்த இடமாற்றங்களை அமுல்படுத்துவதன் மூலம் யாழில் உள்ள சிறிய வைத்தியசாலைகள் பயனடையும் என்பது உண்மைதான். ஆனால் நிர்வாக அமைப்பின்படி இந்தவைத்தியர்களுக்கு அனுபவம் இருந்தும் அவ்வவ் வைத்தியசாலைகளுக்குரிய மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவைகளை வழங்க முடியும்.

ஆனால் அவர்களால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க போதிய அளவிலும் அனுபவத்துடனும் வைத்தியர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருக்க மாட்டார்கள்.

நோயாளர்களை அவசியமின்றி அதிகளவில் கொழும்புக்கு அனுப்பும் நிலைமை ஏற்படும். மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெறவுள்ள வைத்தியர்களுள் அரைவாசிக்கும் குறைவானவர்களே யாழில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு இடமாற்றப்படவுள்ளனர்.

ஏனையோர் வடக்குக்கு வெளியே செல்லவுள்ளனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையை பலவீனப்படுத்தி தமது வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களைத் தருவதில் ஈற்றில் ஒட்டுமொத்த பலனேதும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவது இல்லை என்பதை செயலாளருக்கு விளக்கினர்.

இந்த ஆபத்தான நிலைமையை உருவாக்கியதில் பதவியில் இருந்து இறக்கப்பட்ட அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.போதனா வைத்திய சாலைக் கிளையின் தலைவர் டொக்டர் நிமலன், துணைச்செயலாளர் டொக்டர் ராகுலன், வடக்கிற்கான இணைப்பாளர் என தனக்குத்தானே பதவி ஏற்படுத்திக்கொண்ட கொழும்பில் பணியாற்றும் டொக்டர் சாயிநிரஞ்சன், மற்றும் ஒரு சிலரே காரணம்.

இவர்கள் தமது தனிப்பட்ட கோபங்களுக்காக தொடர்ந்து இவ்வைத்தியசாலையை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு கட்டமே இந்த இடமாற்றங்களாகும்.

இவர்களின் தவறான நடவடிக்கைகளில் விரக்தியுற்ற துணைத்தலைவர், செயலாளர் உட்பட 7 பேர் ஒரு கிழமைக்கு முன்னரே பதவி விலகியுள்ளனர். தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை தலைவர் டொக்டர் நிமலுனுக்கெதிராக நம்பிக்கை இன்மைப் பிரேரணை ஒன்றை மூன்றில் இரண்டுக்கு பங்குக்கு மேற்பட்ட வைத்தியர்கள் கையெழுத்திட்டு சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க கிளைக்கு இடைக்கால நிர்வாக சபை ஒன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டொக்டர் நிமலன் தானே தலைவர் என தொடர்ந்தும் அடாவடியாக இயங்கி வருகின்றார். அத்துடன் பொய்த்தகவல்களுடன் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றார்.

 

Comments