vin
அமெரிக்காவின் சியாட்டில் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அமேசான்.காம் என்ற இணையதள நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் இணையதள விற்பனைப்பிரிவில் இந்து மதக் கடவுளான விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடவர்களின் பேண்ட் வகைகள் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தன.
பெல்பாட்டம் பேண்ட்டுகள், அரை பேண்ட்டுகள் போன்றவற்றின் பின்புறங்களிலும், கால்பகுதிகள் மற்றும் காலுறைகளிலும் விநாயகக் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது இந்துக்களிடையே கோபத்தை எழுப்பியது. கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் இத்தகைய விளம்பரங்கள் அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
நெவாடாவைச் சேர்ந்த ராஜன் செட் என்ற ஆர்வலர் அமேசான் நிறுவனம் தங்களது விற்பனையைத் தடை செய்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்து சமூகத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அமேசான் நிறுவனம் இந்த விற்பனையைத் தடை செய்துள்ளதாக அவர் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார். ஞானத்தின் கடவுளாக அறியப்படும் விநாயகப் பெருமான் எந்தக் காரியத்தையும் தொடங்கும்முன் தடைகளை நீக்குவதற்காக வணங்கப்படும் தெய்வம் ஆவார். இவரது உருவம் பொறித்த பேண்ட்டுகளை அணிவது என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் மற்றொரு இந்துமதக் கடவுளான சிவனின் உருவத்துடனும், அவரது பெயரிலும் பீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் போன்றவற்றை ஒரு அமெரிக்க மது தயாரிப்பு நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டது. இதனை எதிர்த்த இந்துமத அமைப்புகள் தங்களுடைய ஆட்சேபனையை ஆன்மீக வளர்ச்சி மையக் குழுவின் கடிதத்தின்மூலம் புது டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கும் தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து அந்தத் தயாரிப்பின் பெயர் மாற்றப்பட்டதோடு கடவுள் உருவம் பொறிக்கப்பட்டிருந்த மது பாட்டில்களும் திரும்பப் பெறப்பட்டன.

Comments