anaicoddai.com
சீன காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உடல் ஊனமுற்ற 9 வயது சிறுவனின் கனவுக்கு, அந்நாட்டு போலீசார் உயிர் கொடுத்து, அச்சிறுவனை உணர்ச்சிபூர்வமாக நெகிழ வைத்தனர். சீனாவில் ஜியாங்சி மாகாணம் சினு நகரைச் சேர்ந்த சோவ் ஜுன்யி என்ற 9 வயது சிறுவன், காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்டிருந்தான்.

ஆனால், இந்த ஆசை நிறைவேறாத வகையில், அவனுடைய 6-வது வயதில் தசை நோயால் 2 கால்களும் செயலிழந்துவிட்டன. ஆயினும், தன்னுடைய உணர்வினை அச்சிறுவன் அவ்வப்போது அண்டை வீட்டாரிடம் தெரிவித்து ஆதங்கப்படுவது வழக்கம். இச்சிறுவனின் விருப்பம் குறித்து காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக சோவ்வின் விருப்பத்தை நிறைவேற்ற காவல்துறையினர் முற்பட்டனர். சக்கர நாற்காலியில் அமர வைத்து சினு காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அச்சிறுவனுக்கு, காவல்துறை சீருடை அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர், அருகாமையில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சோவ், அங்கு கலவரத் தடுப்பு போலீசாரின் பயிற்சியை கண்டுகளித்தான்.

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், சற்று நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டான். கொள்ளையர் மற்றும் பிணைக் கைதிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காவல்துறையினர் செய்து காட்டிய ஒத்திகையில், இச்சிறுவனும் பங்கேற்றான். ஒருநாள் முழுவதும் காவல்துறையினருடன் சேர்ந்திருந்து தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட சோவ், தனக்கு இந்த வாய்ப்பு அளித்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துக் கொண்டான். சோவ் விடைபெற்றபோது அவனுடைய கண்கள் மட்டுமல்ல, காவல்துறையினரின் கண்களும் பனித்தன.

Comments