mat

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு தரம் 5 வரையான வகுப்புகளை கொண்ட கிளி.அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பள்ளியின் அதிபர் நா.கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில். பிரதம விருந்தினராக த.தே.கூட்டமைப்pன் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் முருகவேல், கரைச்சி கோட்ட கல்வி அதிகாரி அ.அமிர்தலிங்கம், கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கிருபா லேணேர்ஸ் சார்பில் செல்வராஜா உட்பட கிராம அலுவலர் சந்திரபாலன், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மலையாளபுரம் கிராமத்தை சேர்ந்த கலாபூசணம் ஏழமலை முன்னாள் பாரதிபுரம் வித்தியாலய அதிபரும் நலன்விரும்பியுமான ராஜேந்திரம், அயல்பாடசாலை அதிபர்கள் த.தே.கூட்டமைப்பின் கரைச்சி பிரதேச அமைப்பாளரும் பா.உறுப்பினரின் செயலாளருமான பொன்.காந்தன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் மாணவர்கள் பரிசில்களும் நினைவுசின்னங்களும் வழங்கி மதிப்பளிக்கபட்டனர். அத்துடன் கற்பித்த ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டதோடு கிராமத்தை சேர்ந்த கலைஞரும் படைப்பாளியும் பாடசாலை நலன்விரும்பியுமான கலாபூசணம் ஏழமலை அவர்களும் மதிப்பளிக்கப்பட்டார்.

நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,

இந்த பாடசாலையை பார்க்கின்றபோது ஒருவகையில் மிகவும் பெருமையாகவும் இன்னாரு புறத்தில் கவலையாகவும் உள்ளது. மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய இந்த கிராமத்து மக்களின் பிள்ளைகளின் கல்வி ஆர்வமும் அதனூடான சாதனையும் மகிழ்ச்சி தருகின்றது.

இன்னொரு புறத்தில் இந்த பாடசாலையின் மிகவும் ஏழைக்கோலம் இன்று அபிவிருத்தி பற்றி உலகத்திற்கு தம்பட்டமடிப்பவர்களின் கண்களுக்கு தெரியவில்லையே என்பதை நினைத்து மனம் வேதனை அடைகின்றேன்.

ஏ9 வீதியை ஒட்டிய ஆடம்பரமான கட்டிடங்களும் வாழ்க்கையும் இந்த கிளிநொச்சி மண் ஏதோ அதிஉயர்ந்த வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் மேலே சென்றுவிட்டதாக வருவோர் போவோருக்கு தோன்றினாலும் உள்ளே சில கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிராமக்களின் நிலை என்ன என்பதற்கு இந்த மலையாளபுரம் அன்னை சாரதாதேவி வித்தியாலயம் மிகச்சிறந்த உதாரணம்.

ஆனாலும் தமது கிராமத்தில் ஒரு பள்ளி தோன்றியுள்ளதே என்று மகிழ்வடைகின்றது. இந்த கிராம மக்களின் மனங்கள். காரணம் தம்மை போல தமது பிள்ளைகளும் வெயிலில் மழையில் காலம்காலமாக ஓடாய்தேயும் நிலைமாறி படித்த உயர்ந்த மேதைகளாக உருவாகவேண்டுமென அவர்கள் கனவு காண்கிறார்கள்.

அதற்காக இந்த பள்ளியோடு நெருங்கி இருப்பதை உணரமுடிகின்றது.என்னை பொறுத்த அளவில் நான் இந்த மாணவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவர்கள் சாதனைகள் படைக்கும்போது அவர்களை மேலும் உந்தி தள்ளிவிட நானும் எனது மாவட்ட கட்சியின் கிளையும் பிரதிநிதிகளும் உங்களுக்கு உதவ முன்நிற்போம்.

இந்த பாடசாலையின் நிலை அறியும்போது புலம்பெயர் தமிழ் மக்களும் உதவ முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அதேபோல இங்கே வலய கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர் போன்றவர்களும் கலந்துகொண்டிருப்பதால் இந்த பள்ளிக்கான வளங்கள் விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக நான் நம்புகிறேன்.

மிகச்சிறந்த மாணவவளம் இங்கே இருப்பதால் அதை தக்கவைக்க நாம் இணைந்து பாடுபடுவோம் என குறிப்பிட்டார்.

Comments