pooja_001

தேர்வு கட்டணம் செலுத்தாததால் வகுப்புக்கு வெளியே நிறுத்தியதற்காக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணலி சிபிசிஎல் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா (13). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் பள்ளியில் தேர்வு கட்டணம் செலுத்தாததால் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. மாலையில் வீடு திரும்பியதும் இதை பெற்றோரிடம் பூஜா தெரிவித்து அழுதுள்ளார்.

இவரை சமாதானப்படுத்திய பின்னர் தாய் பொற்கொடி பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

இரவு திரும்பி வந்தபோது பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து அலறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூஜாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பூஜாவை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். புகாரின் பேரில் மணலி இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகள் சாவுக்கு காரணமான அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிசில் மாறன் புகார் அளித்துள்ளார்.

Comments