kal
2014.07.17 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள மானிப்பாய் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. சூரியகுமாரி ஜெயவீரசிங்கம் அவர்களின் மணி விழாவைக் கொண்டாடி மகிழ்வதற்காக பாடசாலை அதிகார வர்க்கத்தினர் தீர்மானித்துள்ளனர். மாணவர்களிடம் பணத்தினை அறவிட்டு இவ்விழாவிற்கான  செலவுகளை ஈடுசெய்வதற்கு மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது. இவ்விழாச் சபையின் தலைவராக மருத்துவர் ஒருவர் செயற்பட்டுவருகின்றார்.மாணவர்களிடமிருந்து கட்டாயப்படுத்திக் கறக்கப்படும் பணத்தினைப்பயன்படுத்தி, நூல் ஒன்றினை வெளியிடுவதற்கும், தங்கச் சங்கிளி ஒன்றினை அதிபாரிற்குப் பரிசளிப்பதற்கும், மதிய உணவு உண்டு மகிழ்வதற்கும் மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது.

இவ்விழாவிற்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா 1000 ரூபா வீதம் அறவிடல் வேண்டும் என மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது. அனைத்து மாணவர்களும் இந்நிதியை செலுத்துவதனை நெறிப்படுத்தி உறுதிப்படுத்தும் பொறுப்பு வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், பணத்தினை மாணவர்கள் நேரடியாக பாடசாலை அலுவலகத்தில் செலுத்தி பற்றுச் சீட்டினைப் பெற்றுக்கொள்கின்றனர். பற்றுச்சீட்டு மாணவர்களின் பெற்றோரின் பெயாரில் வழங்கப்படுகின்றது.

தலா 1000 ரூபா வீதம் செலுத்தாத மாணவர்களை பணத்தைச் செலுத்தவேண்டும் அல்லது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரவேண்டும் என வகுப்பாசிரியர்கள் மாணவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். பாடசாலை முகாமைத்துவத்தின் இவ்வாறான நடவடிக்கை மூலம் பல ஏழை மாணவர்களும் அவர்களது பெற்றோரும் பாரிய அளவில் மனஉழைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் பாடசாலை முகாமைத்துவத்திற்குப் பயந்த மாணவர்கள், கடன்பெற்றாவது பணத்தினைக் கட்டுமாறு பெற்றோரை மண்டாடுகின்றனர்.  ஒருசில பெற்றோர் தம்மால் 500 ரூபா தான் செலுத்தமுடியுமென வாதாடி செலுத்தியுள்ளனர்.

ஏறத்தாழ 1500 மாணவர்கள் வரையில் கல்வி பயிலும் இக்கல்லூரியில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நிதி சேகரிப்பு நடவடிக்கை மூலம் குறைந்து 10 லட்சம் ரூபா நிதி சேகரிக்கப்படும் என மணிவிழாச் சபையினர் தீர்மானித்துள்ளனர்.

பாடசாலை நிகழ்வுகளிற்காக மாணவர்களிடமிருந்து எவ்வகையிலான நிதி சேகரிப்புக்களையும் மேற்கொள்ளக்கூடாதென மத்திய கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளபோதிலும், இப்பாடசாலையால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பணம் பறிப்பு நடவடிக்கை தொடர்பாக கல்வித் திணைக்களம் பாராமுகமாக இருப்பதையிட்டு பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வதிபர் பாடசாலையில் கடமையாற்றிய காலத்தில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள்(பாடசாலைக்கு மாணவர்களை இணைக்கும்போது பணம் பெற்றமை, பொன்விழாக் கொண்டாட்டத்திற்கான கணக்கிற்கு கொண்டுவரப்படாத நிதிசேகரிப்பு) , அதிகார துஸ்பிரயோகங்கள் (unicef  அலுவலர்களைக்கூட தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்) போன்ற பல்வேறு பட்ட குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தபோதிலும், ஏதோ ஒருவகையில் அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு வந்துவிடுவதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

Comments