இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி 18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம் தொடர்கின்றது.

Mühlhausen அருகாமையில் தொடர்ந்து கொண்டிருக்கும் நடைப்பயணம் ஐரோப்பிய வடகடலையும் சுவிஸையும் இணைக்கும் Rain நதி ஓரமாக நகர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுவிஸை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைப்பயணத்தை தொடர் எழுச்சியுடன் ஜெனிவா வரை அழைத்துச் செல்வதற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழர்களின் வெளியக வெகுஜனப் போராட்டங்களினதும் உள்ளக இராயதந்திர நகர்வுகளினதும் அறுவடையாகவே இலங்கை 19 மே 2009 க்குப் பின் மிகப்பெரும் சர்வதேச அழுத்தம் ஒன்றுக்குள் தற்பொழுது சிக்கியுள்ளது.

இச்சமயத்தில் உலகத் தமிழர்களின் உணர்வுகளை மீண்டும் சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து அனைவரையும் மார்ச் 5ம் திகதி ஐ.நா முன்றலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறார்கள் நடைப்பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள்.

அத்துடன் நடைப்பயணத்தை மேற்கொள்வோர் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு சிறீலங்கா இழைத்துள்ள அநீதிக்கு நீதி பெற்றுத்தர விரைந்து செயற்படவேண்டுமெனவும் மற்றும் நிராயுதபாணிகளாக பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பும் சர்வதேச சமூகத்தினரதே என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments