anaicoddai

போராடத்தின் எச்சங்கள்
மாறாத ஏக்கங்கள்.! அழுது
தீராத வாழ்வின் வடுக்கள்.
போராளிகளும் இன்றில்லை
போராடியவர்களும் இல்லை..!

ஆனாலும் அடையாளங்கள்
அழியாமலே இன்னும் கிடப்பில்.
காட்சிப் படுத்திட முடியாத
கவலைகள் கட்டுக்குள் இல்லை.
கை புண்ணுக்கு கண்ணாடியேன்..?

பட்டியல் இட்டால் பதைக்கும்
இதயம் இரும்பாகி விட்டது.
பால் மணம் மாறாத பிஞ்சு
தாய் மடி தேடும் துயரம்
பாரில் வேறெங்கு உண்டு..?

மாராப்பு நனைந்திட தன்
மார்போடு அணைத்த சேயை
தொலைத்திட்ட கொடும் துயரும்
தொலைத்திட்ட உறவுகளைத் தேடி
தேய்ந்து போன பாதச் சுவடுகள்…!

பயங்கரவாதிகள் எனும் தீராத
முத்திரைக்குள் முடங்கியே தம்
ஆயுளை ஆண்டுக்கணக்கில்
அழித்திடும் அவலக் குழந்தைகள்
அவனியில் கட்டுப்பாடிழக்கின்றனர்.!

ஏழு ஸ்வரங்களுக்குள்ளும் என்நாளும்
பூபாளத்தை தேடிக் காண்ணீரில் இசை.
தோடியும் முகாரியும் சேர்ந்த் ஒப்பாரி.
வாடிப் போனது அவர்கள் வசந்தம்
தேடி உதவாத பெரும் சொந்தம் நாம்..!

போராட்டம் முடிந்தும் தொடருது
மனப் போராட்டங்கள். ஏற்றமில்லா
கதிரை மாற்றங்களால் கிட்டுமா
விரும்பிய விடுதலை.. கேட்குமா
ஈழ மண்ணில் ஆனந்த இராகம்..!

அக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

Comments