jaffna_people_001யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டிருந்த பிரதேச மக்களின் 590 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்றும் நடவடிக்கைக்காக சனிக்கிழமை (11) காணி உரிமையாளர்கள் காணிகளை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் விடுத்திருந்த அறிவிப்புக்கமைய, முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும் வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் இறுதிப் பகுதிக்குள் மிகுதிக் காணிகளும் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடுத்த கட்டமாக வலி வடக்கின் 9 கிராம சேவகர் பிரிவில் 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்திருந்த நிலையில், சனிக்கிழமை (11) பகுதி பகுதியாக மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைக்காக 590 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே – 235 கிராமஅலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே – 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே – 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே – 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே – 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே – 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ – 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே – 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே – 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

Comments