mina
படுக்கையில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியான 93 வயது முதியவர்: சுவிஸ் பொலிசார் விசாரணை

சுவிட்சர்லாந்து நாட்டில் படுக்கையில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 93 வயதான முதியவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Saint Sulpice என்ற சிறிய கிராமத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் 93 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அந்த வீட்டிலிருந்து நெருப்பு புகை வெளியே வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் பெற்று வந்த பொலிசார் வீட்டிற்கு வந்து சோதனை செய்தபோது, படுக்கை மீது உயிரிழந்த நிலையில் முதியவர் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி பொலிசார் அந்த அறையை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டு புறப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, வாட் நகர பொலிசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், electric blanket எனப்படும் குளிரை கட்டுப்படுத்தும் மின்சார உடுப்பில் இருந்து மின்சாரம் கசிந்ததால் விபத்து ஏற்பட்டு முதியவர் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உடுப்பு மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் சாதனத்தில் கோளாறு ஏற்பட்டதால் மின்சாரம் கசிந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார உடுப்பினால் ஏற்படும் விபத்துக்களால் உலகம் முழுவதும் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

பிரித்தானியா கடந்த 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 20 பேர் மின்சார உடுப்பினால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 1992ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை மின்சார உடுப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக சுமார் 35,000 தீவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments