ani

 

மதங்களை அரசியலில் உள்நுழைப்பது அந்த மதத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய தீங்காகிவிடும் என இலங்கைக்கான துருக்கித் தூதுதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் தெரிவிக்கின்றார்.  மதச்சார்பின்மையே துருக்கியின் சுபீட்சத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் அடித்தளமிட்டதாகவும் அவர்  சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கைக்கான துருக்கித் தூதுதுவரிடம் பிரத்தியேக செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலின் கடந்தவாரத் தொடர்ச்சி…
கேள்வி:- துருக்கி மதச்சார்பற்ற அரசியல் யாப்பைக் கொண்டுள்ளது. தமது அரசியல்யாப்புக்களில் மதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் பல இருக்கும் போது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உங்கள் நாடு உலகிற்கே சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்றது. இலங்கையர்கள் தற்போது அரசியல்யாப்பு தயாரிப்பு வாதப்பிரபதிவாதங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் யாப்பு என்பது மதச்சார்பற்றதாக அமைவது எந்தளவிற்கு முக்கியமானது எனக்கருதுகின்றீர்கள்?
பதில்:- அது மிகவும் முக்கியமானது. 90 வருடங்களுக்கு முன்னர் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு நவீன துருக்கி கட்டியெழுப்பப்பட்டபோது  நாகரிகமிக்க, மேற்குலக நாடாக மாறுவதற்கு அரசையும், மதத்தையும் வேறாக்க வேண்டும் என துருக்கியின் ஸ்தாபகத் தலைவர்கள் எண்ணினர். மக்களின் வாழ்க்கையில் மதங்கள்  மிகவும் முக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகத்திற்குமிடமில்லை. அதனை நாம் மதிக்க வேண்டும். அதனை  நன்கு கட்டிக்காக்க வேண்டும். ஆனால் நாம் மதங்களை அரசியலில் கலந்துவிட்டோமானால் நீங்கள் அந்த மதத்திற்கு மிகப்பெரிய தீங்கைச் செய்கின்றீர்கள்.
ஏனெனில் சிலதரப்பினர் தமது தனிப்பட்ட அரசியல் தேவைப்பாடுகளுக்காக மதத்தை அரசியலைப் பயன்படுத்துவர். தமது தனிப்பட்ட தேவைகளுக்காக மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துபவர் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உண்மையான விசுவாசிகள் உண்மையான மதப்பற்றாளர்கள் கொண்டிருப்பதில்லை. இது தீர்க்கமானதொரு விடயம். உங்களது அரசியல் நலன்களுக்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்யும் போது மதத்திற்கு தீங்கிழைக்கின்றீர்கள். மறுமுனையில், பன்மைத்துவம் கொண்ட ஜனநாயக  சமூகம், விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம்,  சுயமாக சிந்திப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றை  நீங்கள் விரும்புமிடத்து ஒன்றையையும் சார்ந்திராத அமைப்பு முறை அவசியமாகும். சார்பின்மை என்பது ஒருவர் தாம் விரும்பியதை விசுவசிப்பதற்கோ அன்றோல் விசுவசிக்காமல் இருப்பதற்கோ கொண்டிருக்கும் உரித்துடைமையைக் குறிக்கும். எந்தவிதமான நம்பிக்கையையோ வழிமுறைகளையோ யார் மீதும் திணிக்காத நிலை சார்பின்மையில் உள்ள முக்கியவிடயமாகும். மதச்சார்பின்மை இந்த உத்தரவாதத்தை எமக்கு வழங்குகின்றது.
கேள்வி:- மதச்சார்பின்மையை கொள்கையாகக் கொண்டிருப்பதனால்  உங்கள் நாடு அடைந்துள்ள நன்மைகள் எவை?
பதில்:- துருக்கியை  கடந்த 90வருடங்களில் அதன் அமைப்பைக் கொண்ட அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து துருக்கி இன்றைய நிலையில் உலகின் 17வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் நேட்டோ அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய இராணுவப் பலத்தைக் கொண்ட நாடாகவும் 10,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தனிநபர் வருமானத்தைக் கொண்டதாகவும் கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட ஜனநாயக நாடாகவும் திகழ்கின்றது. இதனை எப்படி அடைந்துகொள்ள முடிந்தது? சார்பற்றதன்மை கொண்ட ஜனநாயக  ஆட்சி முறையால்தான் இது சாத்தியமானது.
எமது நாட்டின் வரலாற்றில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இராணுவ ஆட்சியும் இடம்பெற்றதுண்டு. ஆனால் இறுதியாக நாம் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை வைத்தோம். சுதந்திரமான தேர்தல்கள் கருத்து வெளியிடும் சுதந்திரம்  எந்தவகையான மதநம்பிக்கைகளையும் யார் மீதும் திணிக்காமை காரணமாக நாம் அதிகமாக சுதந்திரமாக சிந்திக்கும் மக்களாக மாறினோம். இது நாட்டில் சுபீட்சத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் கொண்டுவந்தன.
எம்மைச் சுற்றி அமைந்துள்ள சிரியா, ஈராக் போன்ற நாடுகள் பாரிய பிரச்சனைகளில் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றன. அங்கெல்லாம் மதத்தின் ஒரு பிரிவைப் பின்பற்றுகின்றவர்கள் மற்றைய தரப்பினரை அடக்கியொடுக்கி வருகின்றனர். இதனால் பாரிய கசப்புணர்வுகள் பிரச்சனைகள் அங்கு குடிகொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் மதச்சார்பற்ற எதனையும் முன்னுரிமைப்படுத்தாத  ஆட்சிமுறை இருந்திருப்பின் அவை கூட சுபீட்சமிக்க முன்னேறிய நாடாக இருந்திருக்கும். ஜனநாயகம் இன்மை, ஜனநாயக கற்கைகள் இன்மை, கருத்துவெளியிடும் சுதந்திரம் இன்மை, அனைத்து பிரஜைகளுக்கும் சம வாய்ப்புக்கள் இன்மையானது  நாட்டிற்கு அழிவையே இறுதியில் கொண்டுவரும்.
கேள்வி:- உலகின் பதற்கரமான சிக்கல்கள் மிக்க பிரதேசங்களிலொன்றான மத்தியகிழக்கிற்கு அருகே கேந்திரஸ்தானத்தில் உங்களுடைய நாடு அமைந்திருக்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான மேற்குலகின் இராணுவ திட்டங்களில் துருக்கியின் வகிபாகம் பிரதானமானதாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் பரிமாணத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்:- ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. நாம் அதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்தாண்டு ஜுனில் இடம்பெற்ற தேர்தலையடுத்து எமது தென்கிழக்கு பிராந்திய மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் தலைநகர் அங்கராவில் இடம்பெற்ற சமாதான பேரணியொன்றில் இரண்டு தற்கொலைக்குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பே பொறுப்பாகும்.
இந்த அமைப்பினர்  இஸ்லாமிய தேசத்தை முன்னிறுத்துபவர்கள் என்றெல்லாம் கூறப்படுகின்றது. எவரும் இதில் குழம்பிக்கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கும் இஸ்லாமிய மதத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் கிடையாது என்பது நிச்சயம். இவர்கள் கொடூரமான சிந்தனைகளைக் கொண்ட அசாதாரணமான வெறிபிடித்த கூட்டம். இஸ்லாம் மதத்திற்கும் இவர்களுக்கும் ஒற்றுமையேதும் கிடையாது. இஸ்லாம் சமாதானத்தின் மதம், இஸ்லாம் புரிந்துணர்வின் மதம், இஸ்லாம் சமத்துவத்தின் மதம். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எவரது கருதியாக இவர்கள் இருப்பினும் இவர்கள் தம்மை முஸ்லிம்களாக தம்மைக்காட்டிக்கொள்ள எத்தனித்தாலும் இவர்களை மிலேச்சத்தனம் கொண்ட கொலைகாரர்களாகவும், பயங்கரவாதிகளாகவுமே நோக்கமுடியும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான சண்டையில் துருக்கி ஒரு முன்னோடியாக மேற்குலகினரின் நெருங்கிய பெரும் பங்காளானாக திகழ்கின்றது.  ஐ.எஸ்.ஐ.எஸ் நிலைகளின் மீதான தாக்குதல்களின் போது துருக்கியிலுள்ள இராணுவத்தளங்கள் கூட்டு நாட்டுப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளிலும் நாமே அதிகமான பங்களிப்பை, வளங்களை வழங்கி வருகின்றோம். இது மிகப்பெரிய பிரச்சனை.  இதனை கூட்டு வழிமுறை மூலமே தீர்க்க முடியும்

Comments