shriyan-saran-8‘‘புதிய நடிகைகள் வரவால் என் மார்க்கெட் சரியவில்லை. 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன்’’ என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.

நடிகை ஸ்ரேயா மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. இவ்வளவு காலம் ஒரு நடிகையால் கதாநாயகியாக தாக்குப்பிடிப்பது கஷ்டம். அக்காள், அண்ணி வேடங்கள் என்று மாறி இருப்பார்கள். ஆனால் எனக்கு தொடர்ந்து கதாநாயகி வேடம் வந்து கொண்டு இருக்கிறது. வருடத்துக்கு இரண்டு படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லா படங்களுமே வெற்றி படங்கள்தான்.

என் உடம்பு சினிமாவில் அறிமுகமானபோது எப்படி இருந்ததோ அப்படியே இன்னும் இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள். இந்த பாராட்டுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் நடித்த முதல் தெலுங்கு படமான ‘இஷ்டம்’ 2001-ல் திரைக்கு வந்தது. அந்த படம் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பார்வை என் மீது விழுந்தது. ‘சந்தோஷம்’ தெலுங்கு படத்துக்கு பிறகுதான் பட வாய்ப்புகள் குவிந்தது.

2005-ல் மட்டும் தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தேன். இது சாதாரண சாதனை இல்லை. தினமும் சினிமாவுக்கு புதிய கதாநாயகிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் என் ‘மார்க்கெட்’ சரியவில்லை. எனது இடத்தை யாரும் பிடிக்கவில்லை. இந்தி படங்களிலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

தமிழில் பிரகாஷ்ராஜ், சினேகா நடித்த ‘உன் சமையல் அறையில்’ என்ற படம் இந்தியில் தயாராகிறது. அந்த படத்தில் சினேகா நடித்த வேடத்தில் நடிக்கிறேன். நானா படேகரும் என்னுடன் நடிக்கிறார். நான் இதுவரை நடித்ததில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படம் ‘சிவாஜி.’ அந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அதிர்ஷ்டம்.’’

இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

Comments