வட மாகாண விளையாட்டுத் தினைக்களத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே யாழ் மாவட்ட செயலக விளையாட்டுப பிரிவு நடத்திய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சங்கானைப் பிரதேச செயலக அணி மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

ஆறு பேர் பங்கு பற்றிய 05 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய ஆட்டத்தின் இறுதிப் போட்டி மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று திங்கள் கிழமை 16 ம் திகதி  பிற்பகல் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சங்கானை பிரதேச செயலக அணியும் நல்லூர் பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.

நாணயச்சுழற்சியில், வெற்றி பெற்ற சங்கானைப் பிரதேச செயலக அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 05 ஓவாகள் நிறைவில் ஒரு இலக்கை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சங்கானை அணியில், எஸ்.பானுப்பிரியா 30 ஓட்டங்களையும், கே.சுகன்யா ஆட்மிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 08 ஓட்டங்களும் பெறப்பட்டன. இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்களைப் பெற்றுவிட்டு மூன்றாவது ஓட்டம் பெற எத்தனித்த வேளையில் பானுப்பிரியா ஆட்டமிழந்தார்.

62 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்க துடுப்பெடுத்தாடிய நல்லூர் பிரதேச செயலக அணி 05 ஓவர்கள் நிறைவில் ஒரு இலக்கை இழந்து 29 ஓட்டங்களை மட்டும் பெற்றது. அதன் சார்பில், என்.கௌதமி 17 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்நத எஸ்.பானுப்பிரியா ஒரு ஓவர் பந்து வீசி 06 ஓட்டங்கள் கொடுத்து ஒரு இலக்கை கைப்பற்றி போட்டியின் ஆட்டநாயகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Comments