55_05வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியில் பொட்டம்மான் ஏறியுள்ளார் எனக் கூறி ரகளையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் மாலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்வண்டியில் மதுபோதையில் ஏறிய இளைஞர்கள் சிலர், பின் இருக்கையில் உட்கார்ந்துள்ளனர்.

பஸ்வண்டியில் பயணிகள் ஏறியவுடன் அவர்களைச் சுட்டிக்காட்டி இவரோ பொட்டம்மான்? இவன் பொட்டம்மானின் சொந்தக்காரனோ? என்று அச்சுறுத்துவது போல கேட்டதுடன், பயணிகளைக் கெட்டவார்தைகளாலும் ஏசியுள்ளார்கள்.

இச்சம்பவம் மேற்படி ND 7392 என்னும் இலக்கமுடைய பஸ்வண்டியில் இன்று மாலை 6.30, 7.00 மணியளவில் ஏ-9 வீதியால் பஸ் பயணித்துக் கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இடம்பெறும்போது பஸ் நடத்துநர் எதுவும் தெரியாதது போல் நின்றிருந்தார்.

பயணிகள் சிலர் பஸ் நடத்துநரிடம் எடுத்துக்கூறியபோது அதனை அவர் கருத்திலெடுக்காமல் அவ்விடத்திலிருந்து முன்னே சென்று நின்றுள்ளார்.

பஸ்வண்டிப் பயணிகளிடையே பொட்டம்மானைத் தேடிய இளைஞர்கள் தாம் பொட்டம்மானுக்குக் கீழ் இயக்கத்தில் இருந்ததாகவும் அதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொட்டம்மானைக் கண்டுபிடிக்காமல் தாம் விடப்போவதில்லை எனவும் அடிக்கடி பெரிதாகக் கூறிக் கூச்சலிட்டபடியே பயணித்தார்கள்.

அவ்வேளையில் பஸ்வண்டியில் சினிமாப்படம் போடப்பட்டிருந்தது.

பொட்டம்மான், பொட்டம்மான் என பெயர் சொல்லி அடிக்கடி கூச்சலிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர்களில் சிலர் மட்டுமே மதுபோதையில் இருந்தனர்.

அவர்களுடன் கூடப் பயணித்த சில இளைஞர்கள் மக்களை நன்றாக அவதானித்துக் கொண்டிருந்துள்ளார்கள்.

இதனை நோக்கும்போது ஏதோ திட்டத்தின் அடிப்படையில் இவர்களின் செயற்பாடுகள் இடம்பெறுவதாக சந்தேகப்படுவதாக பலர் கூறுகின்றார்கள்.

மற்றும் ஏ-9 வீதியால் பயணிக்கும் பஸ்வண்டிகளில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையிலும் தமிழ் பண்பாட்டுக்கு ஒவ்வாத ஒழுக்கச் சீர்கேடுகள் பல தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இதனை அப்பஸ்வண்டிகளின் நடத்துநர்கள் அனுமதிப்பதுடன், அப்படியானவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவது போலவும் நடந்து கொள்வதாக பயணிகளால் பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இப்படியான சீரழிவுகளும் அடாவடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Comments