british-flag-717

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த நிலையில், புதியதொரு சர்வஜன வாக்கெடுப்பு உடன் நடத்தப்படவேண்டும் என்ற மனுவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

மனுவொன்றைப் பரிசீலிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் கைச்சாத்துக்கள் தேவையென்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத்திருப்பதா? பிரிவதா? என்பது தொடர்பாக புதிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனக் கோரும் மனு பிரிட்டன் நாடாளுமன்றத்தால் கருத்திற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள் பெர்லினில் கூட்டம் இதேவேளை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள், கூடிய விரைவில் பேர்லினில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளன.

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றுகூடி, பிரிட்டன் வெளியேறுகின்ற வழிமுறை மற்றும் விரைவாக விலகுவது பற்றி விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய பிரிட்டன் பிரதமர் பதவி ஏற்பதற்காக காத்திராமல் பேச்சுகளை வெகுவிரைவில் தொடங்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடு யுன்கர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள தேசியவாத மற்றும் ஜனரஞ்சகக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை வரவேற்றுள்ளன. இந்நிலைமையில், பிரிட்டனின் இந்த மாதிரியை பிற நாடுகள் பின்பற்றாமல் தடுப்பது எவ்வாறு என்பதை இந்த அமைச்சர்கள் கருத்தில்கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments