Untitled

பெங்களூர் அருகே மணல் லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்த மராட்டியத்தைச் சேர்ந்த 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்..

கர்நாடகத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள், கோவில்கள் உள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள தத்தாத்ரேயா கோவிலில் சாமி கும்பிட மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் காரில் வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு: மராட்டிய மாநிலம் ஒஸ்யானாபாத் மாவட்டம் பஞ்ச்மகால் பகுதியை சேர்ந்தவர்கள் காரில் ஆன்மிக சுற்றுலாவாக கர்நாடகம் வந்தனர். இவர்கள் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா கனகபுராவில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தனர்.

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா டோங்கிலால் கிராமத்தின் அருகே நேற்று மதியம் வந்து கொண்டிருந்தபோது காரும், எதிரே வந்த மணல் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில், காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி மரண ஓலமிட்டனர். விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் நாரோனா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 4 பெண்கள், 2 ஆண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி இருந்தனர்.

மேலும், 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களை மீட்ட போலீசார் கலபுரகி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து நாரோனா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர்களின் பெயர் விவரம் தெரிய வந்து உள்ளது. விபத்தில் இறந்தவர்கள் இங்கலி(வயது 55), சகாஜாபாய்(50), சஞ்சய் இங்கலி(35), புல்சந்த்(40), காஜாபாய், கிருஷ்ணா இங்கலி, உஷா டொகலி, சப்னில் டொகலி என்பது தெரியவந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மாநில மருத்துவ கல்வித்துறை மந்திரியும், கலபுரகி மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சரணபிரகாஷ் பட்டீல், கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிக்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இவர்கள் விபத்து குறித்து போலீசாரிடம் கேட்டு அறிந்து கொண்டனர். மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவிலுக்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கலபுரகியில் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments