வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து 7 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அச்சுவேலி தோப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பலாலியைச் சேர்ந்த தி. அன்னமுத்து (வயது70) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
இந்த வயோதிபப் பெண் சனிக்கிழமை இரவு 9. 30 மணிவரை அயல் வீட்டாருடன்  உரையாடிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாளான நேற்று ஞாயிற்றுகிழமை வழக்கமாக தண்ணீர் எடுக்க வருபவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை  என்பதை அறிந்த அயல் வீட்டார் அவரைத் தேடிச் சென்று அவரது வீட்டைத் திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பதை கண்டுள்ளனர்.
வீட்டின் கூரைப்பகுதியும் வீட்டின் பின்பகுதியும் உடைக்கப்பட்டிருந்ததையும் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்தப் பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதும் இவரது வீட்டிலிருந்து 7 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நேற்று மாலை சடலம் பிரேதப் பரசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது . இந்தப் பெண்ணின் மகனொருவர் வெளிநாட்டிலிருந்து வந்து இவருடன் தங்கியிருந்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னரே மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments