உடுவில் ஆலடிப் பிரதேசத்தில் பாடசாலை செல்லாமல் இடைவிலகும் மாணவர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 இந்தப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையான குடும்பங்கள் போரால் இடப்பெயர்வைச் சந்தித்திருந்த நிலையில் தற்போது நிறுவனங்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களில் குடியமர்ந்துள்ளன.
 20 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் தமக்கென சொந்த இடங்கள் இல்லாமல் தொழில் வாய்ப்புகளும் அற்ற நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வறுமை காரணமாக பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் வீடுகளில் முடக்கி வைத்துள்ளனர் பெற்றோர்.
 பாடசாலை செல்லும் வயதில் வீடுகளில் முடக்கப்பட்டுள்ள இந்த மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. உளரீதியாகவும் இவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 18 வயதுக்கு கீழ்ப்பட்ட அதிக சிறுவர்கள் இவ்வாறு பாதிப்படைந்துள்ளதால் சிறுவயதில் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
 தற்காலிக வதிவிடத்தைக் கொண்ட இந்தக் குடும்பங்களில் பிள்ளைகள் உடுவில் மான்ஸ் மகாவித்தியாலயம், உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயம், மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று வந்தனர்.
 கடந்த காலங்களில் கட்டாயக் கல்விக் குழுவின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தமை காரணமாக இடை விலகும் மாணவர்கள் தொகை இந்தப் பிரதேசத்தில் கட்டுப்பாட்டில் இருந்தது.
 எனினும் தற்போது இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமை காரணமாக மீளவும் இடைவிலகும் மாணவர்கள் தொகை அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மாணவர்களின் சீரான கற்றல் செயற்பாட்டுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments