அறுபது அடி உயரத்தில் இருந்து கொண்டு தண்ணீர்த் தாங்கி கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தென்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று காலை 8.10 மணியளவில் பருத்தித்துறைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
பாணந்துறையைச் சேர்ந்த எம். பி. எஸ். டி. பெர்னாண்டோ (38 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக மரணமானவராவர்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தொண்டர் நிறுவனங்களின் நிதி உதவியுடன் பருத்தித்துறைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிதண்ணீர் விநியோகத்திற்கான பிரதான தண்ணீர்த் தாங்கி பருத்தித்துறை, புலோலி வடக்கு அறுபாகைக்கிணற்றடியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிர்மாணப் பணிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிலாளர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிர்மாணப் பணியின் போதே குறிப்பிட்ட தொழிலாளி தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
60 அடி உயரத்தில் இருந்து இவர் வீழ்ந்த போதும் சிறிய தலைக் கவசம் அணிந்திருந்தும் ஒரு பக்கமாக பிடரிப் பக்கத்தில் பெரும் அடி விழுந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சடலம் பிரேத பரிசோதனை, மரண விசாரணைகளுக்காக பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments