வேதனை தீராதோ…. கவிப்பாடல்

மழையைக் கண்டு
மயிலினங்கள் ஆடி மகிழுதே
எந்த மனமிரங்கி
எமது வாழ்வை மகிழ வைக்குமே!
குடை விரிந்து கொண்டு
மழையைத் தடுத்து நிக்குதே
எந்த குலம் எமக்கு
அமைதிக் குடை விரிக்குமோ!

பணம் நிறைந்த மனிதரிடம்
பாசம் நிறையுமா – எம்
பசியைப் போக்க அவர் கரங்கள்
எழுந்து கொள்ளுமா!
வறுமை எமது வாழ்வை தினம்
வாட்டி வதைக்குதே
வாழ ஒரு வழ‌ியை மட்டும்
காட்ட மறுக்குதே!

வன்னிக்காட்டில் வாடும் உயிர்களின்
வேதனை தீராதோ – நாம்
வாழும் காலம் எத்தனை
உமக்கும் தெரியாதோ!
உணவும் உடையுமின்றி
உயிர் மானம் போகுதடா
மருந்தின்றி மனித உடலும்
மாறிப் போகுதடா!

கவியாக்கம் : ஆனைக்கோட்டை தமிழ்நேசன் ( மாசி 2002)

Comments