ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமியொருவர் மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று கடந்த புதன்கிழமை தொடங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தை கொண்டு வந்த ரம்புட்டானை சாப்பிட்ட சிறுமி அதன் விதை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்படவே முதலில் வில்பாத்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நாகொடை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மரண விசாரணை நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாகொடை வைத்தியசாலையில் இடம்பெற்றபோது  அந்த சிறுமியின் தந்தை தெரிவிக்கையில்
சம்பவதினத்தன்று நான் கொண்டு சென்ற ரம்புட்டானின் மேற்தோலை கழற்றிவிட்டு சாப்பிடுமாறு மகளிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டேன்.
அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வந்தபோது மகள் துள்ளிக்கொண்டு அவளின் தாத்தாவின் மடியை நோக்கி செல்வதைக் கண்டேன்.
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கிவிட்டதா எனக் கேட்டேன் ஆம் என்று சொல்லும்  வகையில் தலையை ஆட்டினாள். பின்னர் தொண்டையில் சிக்கிய விதையை எடுக்க முயற்சித்த  போதும் அதனை எடுக்க முடியாது போனது.
அருகிலுள்ள வில்பாத்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றேன். பின்னர் அங்கிருந்து நாகொடை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு   கூறினர். அங்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த வைத்தியர் மகள் இறந்துவிட்டதாகக் கூறினார்.
இதேவேளை தற்போது நாடெங்கிலும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் போன்ற பழவகைகள் காய்க்கும் காலம் என்பதனால் இது போன்ற பழவகைகளை பிள்ளைகளுக்கு வழங்கும் போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.

Comments