யாழ்.குடாநாட்டில் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் நேற்று அதிகாலை கொட்டித்தீர்த்த கனமழையால் இதுவரை காலமும் நிலவி வந்த கடும் வறட்சி நிலை சற்று குறைவடைந்தது. விவசாய நிலங்கள் குளிர்ச்சியடைந்தன.  நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை குடாநாட்டின் பல பாகங்களிலும் கொட்டித் தீர்த்தது. சுமார் 5 மணிநேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இயற்கையின் மாறுபட்ட செயற்பாட்டால் இவ்வருடம் குடாநாட்டில் மழை இல்லாது கடும் வறட்சி நிலை தொடர்ந்து நிலவியது.

சித்திரைச் சிறு மழையென கூறப்படும் அந்தப் பருவ காலத்து மழை கூட இந்த வருடம் குடாநாட்டுக்குக் கிடைக்கவில்லை. அது தவிர தற்போது பெரும் மழைக்கால நிலையில் மழைபெய்யாது இருந்தமையால் பெரும் வறட்சி காணப்பட்டது.
குளங்கள் வற்றியது மட்டுமன்றி கிணறுகளும் நீர்மட்டம் அடியோடு இல்லாத நிலையும் ஏற்பட்டுக் காணப்பட்டது.  இந்த நிலையில் கால்நடைகள் தண்ணீர் இன்றி அலைந்து திரிந்து பெரும் எண்ணிக்கையில் இறந்தன. தீவகப் பகுதிகளிலேயே கால்நடைகள் பெரும்பாலும் இறந்துள்ளன.
அத்துடன் மக்களும் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு இருந்தனர். நீண்ட தூரத்துக்கு நடந்து சென்று தண்ணீரைப் பெற்று வரவேண்டிய நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டிருந்தன. பெரும்பாலும் தீவுப் பகுதி மக்களே தண்ணீர் இல்லாது பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். தென்மராட்சிப் பகுதிகளிலும் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் கிணறுகளில் முற்றாகவே தண்ணீர் இல்லாத நிலைமையும் காணப்பட்டது.
இந்த இயற்கையின் மாற்றத்தால் பயிர் நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான பயிர் நிலங்கள் தண்ணீர் இன்றி கருகி நாசமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மரக்கறிகளின் விலைகளும் உச்சம் பெற்றன. நெற்செய்கை மேற்கொண்டிருந்த விவசாயிகளில் ஒரு சிலர் பவுசர்கள் மூலம் வேறு இடங்களிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து வயல்களுக்கு ஊற்றும் நிலைமையும் இந்தக் காலத்தில் ஏற்பட்டிருந்தது.
இந்தக் கடும் வறட்சி மற்றும் வெப்ப காலநிலையால் வெப்ப நோய்களுக்கும் குறைவில்லாத நிலைமையே காணப்பட்டது. காய்ச்சல், சளி, சுவாச நோய்கள் போன்ற பல்வேறு வெப்ப நோய்களால் பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பெய்த மழை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  யாழ்.குடாநாட்டில் பெய்த இந்த கனமழை 38.3 மில்லிமீற்றர் என்று பதிவாகியுள்ளதாக யாழ். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.எச்.எம். ஹேரத் தெரிவித்தார்.

Comments