நாட்டில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளனர். இது வைத்தியத் துறைக்கு பாரிய சிக்கலான நிலைமையாகும் எனத் தெரிவித்த மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க, சுதேச துறையில் வைத்தியராக இருப்போர் மேலைத்தேய மருத்துகளையே வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

கண்டியில் இடம் பெற்ற செயலமர்வொன்றின்போதே மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,
சிறுநீரகத்தில் ஏற்பட்ட ஒரு நோய்க்கு ஆயுர்வேத மருந்து வகைகளை சிறிது காலம் பாவித்தேன். சில வாரங்களில் எனது நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நான் இந்தியாவிற்குச் சென்று எனது நோயை குணப்படுத்திக் கொண்டேன். பின்னர் திரும்பி வந்து எனக்கு தரப்பட்ட மருந்தை ஆய்விற்கு உட்படுத்தியபோது 90 சதவீதம் கஞ்சா போதை அதில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல் மத்திய மாகாணசபை அங்கத்தவரான அங்கம்மன தொடர்ந்து நீண்டகாலம் “அரிஸ்டை’ வகைகளைப் பாவித்து வந்ததன் காரணமாக அவரது சிறுநீரகம், ஈரல் போன்றவை பாதிக்கப்பட்டு இறுதியில் அவர் மரணமடைய வேண்டி வந்தது.

அதே நேரம் நாட்டில் 30,000 போலி வைத்தியர்கள் இருக்கிறார்கள். இதைவிட இன்னொரு ஆபத்தும் உள்ளது.அதாவது சுதேச வைத்தியத் துறையில் தமது படிப்பபை மேற்கொண்டு வைத்தியராக இருப்பவர்களில் அநேகர் மேலைத்தேய மருந்துகளையே வழங்குகின்றனர்.

இங்கு ஆயுர்வேதத்துறைக்கான ஒழுங்கு விதி முறைகள், பாரம்பரியம் போன்ற அனைத்துமே மீறப்பட்டு வர்த்தக ரீதியில் முதன்மைப்படுத்தப்படுகிறது.

அதேபோல் சிலர் போலி விளம்பரங்களை வழங்கி பணம் பறிக்கின்றார்கள். இப்படியான எமது பாரம்பரிய வைத்திய முறை வீழ்ச்சிக்கு உள்ளாகின்றது.

இலங்கை முஸ்லிம்களில் பாரம்பரிய வைத்திய முறையை கைவிட்டு விட்டனர். சிங்கள மன்னர் காலம் முதல் அதே வைத்தியத் துறையில் பரம்பரை வைத்தியர்களாக இருந்த முஸ்லிம்கள் அத்துறையை கைவிட்டதாகவும் எமது சுதேச வைத்தியத் துறை அருகிவரக் காரணமாகி உள்ளது என்றார்.

இவ் வைபவத்தில் உறையாற்றிய மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பே கடுவ தெரிவித்ததாவது,

1815 ஆம் ஆண்டுவரை இலங்கையில் சுதேச வைத்தியத்துறை பாதுகாக்கப்பட்டு வந்தது. இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொருத்தவரை வைத்தியரத்ன முதியான்ஸேலா என்றும், உடையார் பரம்பரை என்றும் பல்வேறுபட்டவர்கள் உடுநுவரை பகுதியில் வைத்தியர்களாக இருந்து சாதனை படைத்தனர்.

அவ்வாறான வைத்திய ரத்ன முதியான்ஸலாகே உடையார் என்ற பரம்பரை இன்று பாரம்பரிய வைத்தியத்தை கை விட்டுள்ளனர்.

1956 ஆண்டு எஸ். டப்ள்யூ ஆர்.டி. பண்டார நாயகா சுதேச வைத்தியர்களை கௌரவித்து புத்துயிர் அளித்தார். அதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “தேசியம்’ என்ற கொள்கையை பின்பற்றுவதன் காரணமாக ஆயுர்வேதத்துறை படிப்படியாக எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது என்றார்.

Comments