வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலை இடித்துத் தள்ளியது. இதனால் வாகனத்தின் ஒரு பகுதி சிதைந்ததுடன், ஒரு சில்லும் கழன்று ஓடியது.
இந்த வாகன விபத்து யாழ். மானிப்பாய் வீதி, ஐந்து சந்திப்பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தவறான பக்கத்துக்குச் சென்று கிராம அலுவலர் ஒருவரின் வீட்டு மதிலை இடித்து வீழ்த்தி உள்ளே நின்ற வாழை மரங்களையும் துவம்சம் செய்தது. வாகனத்தின் ஒரு பகுதி முற்றாகச் சிதைந்ததுடன், ஒரு சில்லும் உடைந்தது.
இரண்டு பக்க ஒளிச்சமிக்ஞைகளையும் ஒளிரவிட்ட வண்ணம் சாரதி போதை தலைக்கேறிய நிலையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை விட்டுவிட்டுச் சாரதி உட்பட அதில் பயணித்த மூன்று பேரும் தப்பியோடி விட்டனர். மூவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
தப்பியோடிய சாரதி யாழ். மனோகராச் சந்தியை அண்மித்து ஓர் இடத்தில் மறைந்து படுத்துவிட்டார். அவரை இனம்கண்டவர்கள் அவரை ஓட்டோவில் அழைத்துச் சென்று சம்பவ இடத்தில் நின்றிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் சாரதியை யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர்.
பரிசோதனையின்போது அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிசெய்யப்பட்டது. ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த ஒருவரே சாரதியாவார். விபத்துக்குள்ளான வாகனம் பாரம்தூக்கி மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது.

Comments