கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன.

மத்திய ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நிலவிய அதிக மழை காரணமாக
குறித்த பிரதேசங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன.

அவை வழிந்தோடும் நிலையில் இருப்பதனால் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதனால் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில பகுதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த நாட்களில் சுற்றுலாக்கள் மற்றும் யாத்திரைகள் செல்லும் போது அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கையின் மூலம் கோரியுள்ளது.

நீராடும் தருணங்களில் பெரும்பாலும் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ள பகுதிகளுக்கோ அல்லது நீராடுவதற்கு ஏற்ற வகையில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கோ செல்லுமாறு அந்த ஊடக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

பொலனறுவை மாவட்டத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து மாதுருஓயா பெருக்கெடுத்தால் கல்குடாத் தொகுதியில் உள்ள பதினெட்டாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பொலனறுவை மாவட்டத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து மாதுருஓயா பெருக்கெடுத்ததனால் இவ்வயல் நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கல்குடாத் தொகுதியில் உள்ள பெருவெட்ட, ஆத்துச்சேனை, கிலச்சிமடு, கழுவாமடு, பொத்தானை, அக்குராணை, வாகனேரி, தவன, நூறு ஏக்கர் போன்ற பிரதேசங்களில் உள்ள வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பிரதேசங்களில் உள்ள வயல் நிலங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடை இடம்பெறவுள்ள வேளையில் இவ்வேளான்மைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து பிறைந்துறைச்சேனை, காவத்தமுனை, மாஞ்சோலை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை சீரடைந்துள்ள போதிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கின்றது.

Comments