கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால திருநாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டு திருநாள் வழிபாடுகளில் ஈடுபட யாழ். ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் ஆண்டகை திருநாள் திருப்பலியை நிறைவேற்றினார்.

இவ் வருடாந்த திருவிழா திருப்பலியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துருசிங்க, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, கடற்படையின் வடமாகாண கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் சிரந்த உடவத்த மற்றும் யாழ். மாவட்ட நீதிபதி அமலவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலிருந்தும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் அங்கு வருகை தந்திருந்தனர். இந்தியாவிலிருந்து அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களே கலந்து கொண்டனர்.

இதேவேளை, இவ் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றன யாழ்ப்பாணம் அரச செயலக அதிகாரிகளாலும் நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஏற்பாடுகளுக்கு இலங்கை கடற்படையினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அதேவேளை, பொலிஸார் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Comments