வேகக்கட்டுப்பாட்டை இழந்த கடற்படையினரின் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சகோதரன் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சில்லாலையில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அருளானந்தம் அன்ரனிராஜ் (வயது17) என்பவரே உயிரிழந்தவராவார். சகோதரனான அருளானந்தம் அன்ரனி றெக்ஸ் (வயது13) என்பவர் படுகாமயடைந்தார்.
உயிரிழந்த அன்ரனிராஜ், கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டுப் பெறுபேற்றை எதிர்பார்த்திருந்தவராவார்.
பண்டத்தரிப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த தமது தந்தையாருக்கு வீட்டிலிருந்து தேநீர் எடுத்துக் கொண்டு இருவரும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அதன்போது, கடற்படையினர் பயணித்த பிக்கப் வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்களை மோதித்தள்ளிவிட்டு சுமார் 80 மீற்றர் தூரத்துக்கு அப்பால் சென்று பனைமரத்துடன் மோதுண்டு, புரண்டது. அதில் பயணித்தவர்களில் கடற்படையினர் இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகினர்.
பிக்கப் மோதியதனால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் இருவரும் சுமார் 17 மீற்றர் தூரத்துக்கப்பால் தூக்கிவீசப்பட்டனர். அதனால் கடுமையான அடிகாயத்துக்குள்ளான அன்ரனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரையும் உடனடியாகவே அயலவர்கள், சங்கானை வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதும், அன்ரனிராஜ் உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
படுகாயமடைந்த அன்ரனி றெக்ஸ் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த கடற்படையினர் இருவரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சைக்கிள், பிக்கப் வாகனம் என்பன கடுமையாகச் சேதமடைந்தன. வாகனச் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றுபொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments