யாழ்.மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான சென். ஜோன்ஸ் மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான 107 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி  ஆரம்பமாகியது.

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான இத்தொடர் பெரும் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் இம்முறை மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றது.

இரு கல்லூரிகளுக்குமிடையே கடந்த 7 ஆம் திகதி சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த இப்போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்குமிடையே இது வரை நடைபெற்று முடிந்த 106 போட்டிகளில் 33 போட்டடிகளை சென். ஜோன்ஸ் கல்லூரியும் 27 போட்டிகளை யாழ். மத்திய கல்லூரியும் வெற்றி கொண்டுள்ளன. 38 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. மேலும் 7 போட்டிகள் பற்றி தரவுகள் பதிவாகவில்லை.

இந்நிலையில் இம்முறை ஜே. அமிதயான் தலைமையில் களமிறங்கும் சென்.ஜோன்ஸ் அணிக்கும் பீ. டார்வின் தலைமையில் களமிறங்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையே 3 நாள் கொண்ட இப்போட்டியில் கடும் சவாலாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

எனவே இரு கல்லூரி அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த வடக்கின் சமரில் வெற்றியை தனதாக்கிக் கொள்ளப்போகும் அணி எது என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments