வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 19 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வலிகாமம் கல்வி வலய சம்பியனாக மானிப்பாய் இந்துக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன.

இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக காணப்பட்ட போதிலும் மானிப்பாய் இந்துக் கல்லூரி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தியது. ஆயினும் மகாஜனாக் கல்லாரி தனக்கு கிடைத்த தண்டனை உதையை ( பனால்ரி ) உரிய முறையில் பயன்படுத்த தவறியமையால் தேல்வியைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் பெற எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் புதிய உற்சாகத்துடன் களம் புகுந்து மோதிக் கொண்டன.

இரு அணிகளும் களத்தில் கடுமையாக கோல் பெற எடுத்த முயற்சிகள் எதிரணிகளினால் முறியடிக்கப்பட்ட போதிலும் மானிப்பாய் இந்துக் கல்லூரி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி ஒரு கோலை பெற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்டம் விறு விறுப்படைந்த போதிலும் ஆட்டம் முடிவடையும் வரை இரு அணிகளினாலும் மேலும் கோல் பெற முடியாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

ஆட்ட நிறைவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 01 க்கு 00 என்ற கோல் கணக்கில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியை வெற்றி பெற்று வலய சம்பினாக தெரிவு செய்யப்பட்டது.

Comments