உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.
நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதையிட்டு வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் ஈஸ்டர் பண்டிகை களைகட்டியுள்ளதுடன் ஆலயங்களில் இடம்பெறும் விசேட வழிபாடுகள், திருப்பலிகளில் பெருமளவில் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், கொட்டாஞ்சேனை புனிதலூசியாள் பேராலயம், மட்டக்களப்பில் புனித மரியாள் பேராலயம், திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, சில பம், இரத்தினபுரி மற்றும் மேற்றிராசன பேராலயங்களில் விசேட உயிர்ப்புப் பெருவிழா திருப்பலிகள் அந்தந்த மறை மாவட்ட ஆயர்களினால் நிறைவேற்றப்பட்டன.
இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தியானிக்கும் தவக்காலம் விபூதிப் புதனுடன் ஆரம்பமாகி 40 நாட்கள் விசேட வழிபாடுகள், சிலுவைப் பாதை தியானங்கள் ஆராதனைகளுடன் அனுஷ்டிக்கப்பட்டன.
குருத்தோலை ஞாயிறோடு பரிசுத்த வாரம் ஆரம்பமாகியது. புனித வியாழக்கிழமை பாதம் கழுவும் சடங்கு, பெரிய வெள்ளியன்று சிலுவைப்பாதை யாத்திரை திருச்சிலுவை முத்தி செய்தல் போன்ற சடங்குகளும் இடம்பெற்றன.
அல்லேலூயா சனியான நேற்றைய தினம் பாஸ்கா வழிபாடுகள் இடம்பெற்று இன்றைய தினம் உயிர்ப்புப் பெருவிழா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் தமது சீடர்களுக்கு முதன் முதலில் தோன்றி உங்களுக்கு சமாதானம் என்றார். உயிர்த்த இயேசுவின் சமாதானம் உலகெங்கும் நிரந்தரமாக நிலைக்கட்டும்.

Comments