சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படாமையினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி. ஜயசேன கூறுகையில்,

புகையிரத ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடை கடந்த பல வருட காலமாக நீடித்து வருகின்றது. தற்போது பல்வேறு வகையிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெளிவுபடுத்தியபோதும் அது போதிய பயனை எட்டவில்லை.

இந்நிலையில் எமது சம்பள உரிமை குறித்து போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுடன் பல நேரடி சந்திப்புக்களை மேற்கொண்டபோதிலும் வெறும் இழுத்தடிப்புகளே ஏற்பட்டது.

இந்நிலையிலேயே புகையிரத ஊழியர் தொழிற்சங்கங்கள் பலவும் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பினை மேற்கொண்டு இறுதித் தீர்மானமொன்றை எடுத்தது. இதன் பிரகாரம் நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். இதனால் நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரதங்களும் ஸ்தம்பிதமடையும்.

தொடர்ந்தும் அரசாங்கத்தின் பேச்சை நம்பி உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

Comments