பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், கரணவாய் பிரதேச குஞ்சர்கடைப் பகுதியில் இ. போ. ச. பஸ் வண்டியும், இராணுவ டிரக் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் படையினர் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 764 ம் இலக்க வழித் தடங்கல் பஸ் வண்டியும், யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ டிரக் வண்டியுமே இவ்வாறு  மோதிக்கொண்டன.

இச்சம்பவத்தில் இ.போ.ச. டிரக் வண்டி ஆகியவற்றின் சாரதிகள் படுகாயமடைந்தனர். பஸ் வண்டியில் பயணித்த 5 பெண் பயணிகளும், டிரக் வண்டியில் பயணித்த சாரதியுடன் 6 இராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.

பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பெண் பயணிகள் சிகிச்சை பெற்று உடனடியாக வெளியேறினார்கள். எஞ்சிய அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்குள்ளான இ. போ. ச. பஸ் வண்டி யாழ்ப்பாணம் இ. போ. ச. டிப்போவுக்குச் சொந்தமானது.

Comments